மேல்படிப்பை தேர்வு செய்யும்முன் இதை படியுங்க..

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பது குறித்து பேராசிரியர் நெல்லை கவிநேசன் தெரிவித்த கருத்துக்களை காண்போம்.;

Update:2024-05-22 13:31 IST

சென்னை,

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ள நிலையில் மாணவர்களுக்கு பயன் உள்ள தகவல்களை பேராசிரியர் நெல்லை கவிநேசன் தொகுத்து வழங்கி உள்ளார். கட்டுரையாளர் 33 ஆண்டுகள் பேராசிரியராக, துறைத்தலைவராக பணியாற்றியவர். 63 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

"நல்ல படிப்பு படிக்க வேண்டும். நல்ல பதவியில் சேர வேண்டும். சிறந்த மதிப்பு மரியாதையோடு வாழ வேண்டும். எல்லோரும் மதிக்கும்படி திகழ வேண்டும்'' என்றெல்லாம் பல்வேறு எண்ணங்களோடு தங்கள் படிப்பை தொடர்கின்ற இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள்.

" படித்தவன் பாட்டை கெடுத்தான் .எழுதியவன் ஏட்டை கெடுத்தான்" என்று தத்துவம் பேசி, படித்தவர்களுக்கெல்லாம் எங்கே வேலை கிடைக்கிறது? என்று விரக்தியோடு சொல்லிக் கொண்டே வீதி உலா வருபவர்களும் உண்டு. படித்தால் மட்டும் போதுமா? உரிய பண்புகளோடு வளர வேண்டாமா? என்றும் கேள்வி கேட்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

எனவே, ஏன் படிக்க வேண்டும் ?எதற்காக படிக்க வேண்டும் ? எப்படி படிக்க வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்? என்றெல்லாம் திட்டமிடாமல், படித்து முடித்த பின்பு ,படித்த படிப்பையும் ,வாங்கிய பட்டத்தையும் கேலியோடு பார்த்து கிண்டல் செய்பவர்களும் உண்டு.

படிக்கும் படிப்பின் மீதே நம்பிக்கை இல்லாமல் படிக்கும் சூழல் ஏன் உருவாகிறது? படிக்கின்ற படிப்பை வாழ்க்கைக்கு ஏற்ற படிப்பாக மாற்றும் திறனை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யாததால்தான் இத்தகைய சூழல் ஏற்படுகிறது.

ஒருவர் தனது வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் படிப்பை சரியான முறையில் தேர்ந்தெடுப்பது எப்படி என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அவர்களால் மட்டுமே வாழ்க்கையில் சிறந்த வெற்றிகள் பெற்று சாதனைகள் புரிய இயலும்

"சிறந்த பள்ளியில் படிப்பதும், மிகச்சிறந்த கல்லூரியில் மேற்படிப்பை தொடர்வதும் எப்படியாவது ஒரு நல்ல வேலையை பெறுவதற்குதான்" என்ற கருத்து பொதுவாக அனைவரிடமும் நிலவி வருகிறது.

இந்த சூழ்நிலையில், ''படிப்பு என்பது பணிக்காக மட்டுமல்ல , நல்ல பண்புகளோடு வாழ்க்கையில் மன திருப்தியோடும், மன மகிழ்ச்சியோடும் வாழ்வதற்கு" என்ற மனநிலையைகொண்டு இளம்வயதிலேயே படிப்பவர்கள் சிறந்த வெற்றி பெறுகிறார்கள்.

சிறந்த திட்டம் தேவை

இந்த உலகத்தில் வாழ்வதற்கு பல வழிகள் உள்ளன. இருப்பினும் அவற்றுள் மூன்று வழிகள் முக்கியமானவை என பலராலும் கருதப்படுகிறது.

1. ஏதேனும் ஒரு பணியில் சேர்ந்து பொருள் ஈட்டுவது.

2. ஏதேனும் ஒரு தொழில் நடத்தி பொருள் ஈட்டுவது.

3. பிறருடைய பொருளாதார உதவியினால் மட்டுமே வாழ்வது.

உழைத்து பொருளீட்டி வாழ்வதன்மூலம்தான் வருமானம் நமக்கு கிடைக்கிறது இதனால்தான் , ஒருவர் தனது வாழ்க்கையை நிர்ணயிக்கும் தொழிலை அல்லது பணியை பள்ளி -கல்லூரிகளில் படிக்கும் காலத்திலேயே திட்டமிட்டு முடிவு செய்ய வேண்டும்.

"ஏதாவது ஒரு பள்ளியில் சேர்ந்து, பின்னர் ஏதாவது ஒரு படிப்பை முடித்து ,ஏதாவது ஒரு பட்டம் வாங்கி, ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து, ஏதோ ஒரு சம்பளம் பெற்று, எப்படியாவது காலத்தை ஓட்டி வாழ்க்கையை நகர்த்துவோம்" என்று எண்ணி வாழ்க்கைத் தொழிலை (CAREER) திட்டமிடாமல் இருப்பவர்கள் முடிவில் திண்டாடுகிறார்கள்.

வாழ்க்கைத் தொழில் திட்டத்தை (CAREER PLANNING) முன்கூட்டியே வகுத்தவர்கள் வாழ்நாள் முழுவதும் நிம்மதியுடன் வாழ்கிறார்கள்.

ஒருவர் தனது வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றுவதற்கு பணம் மற்றும் பொருட்களை வாழ்நாள் முழுவதும் தன்னோடு வைத்துக் கொள்வது அவசியமாகும். இதனால்தான், வாழ்க்கையில் ஏதேனும் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து, பணத்தையும் பொருளையும் ஈட்ட வேண்டியதும் அவசியமாகிறது.

வாழ்க்கைத் தொழில் காரணிகள்

வாழ்க்கைத் தொழிலை தேர்ந்தெடுக்கும்போது, முக்கிய தகவல்களை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் .

"நான் தேர்ந்தெடுக்கபோகும் தொழில் அல்லது பணி எனது முன்னேற்றத்திற்கு உதவியாக அமையுமா?" என்ற கேள்வியை முதன்முதலில் ஒருவர் தனக்குள் கேட்டுப் பார்த்து அதற்கு உரிய பதிலை ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

ஒருவரது வாழ்க்கைத் தொழிலை தீர்மானிப்பதில் -

1.சுற்றுச்சூழல் (ENVIRONMENT)

2. தகவல் தொடர்பு திறன் (COMMUNICATION)

3. வாழ்க்கைத்தரம் (STANDARD OF LIVING)

4.ஒருவரது பலம் (STRENGTH)

5. அவர் சந்திக்கும் சவால்கள் (CHALLENGES)

6 மனநிறைவு (SATISFACTION)

-ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேலும் வாழ்க்கைத் தொழிலை தேர்ந்தெடுக்கும் போது-

1.தகுதிகள் (QUALIFICATION)

2. பொறுமை (PATIENCE)

3. சிறப்புத்திறமை (SPECIAL SKILLS)

4. பணிச் சூழல் (WORK ENVIRONMENT)

5.நிதி (FINANCE)

6.பணி பாதுகாப்பு (JOB SECURITY)

7.பயிற்சி(TRAINING)

8. கற்றுக் கொள்வதற்கான சூழல்கள்( LEARNING ENVIRONMENT)

9. பாராட்டுகள்(APPRECIATION)

10 எதிர்கால திட்டங்கள் (FUTURE' PLAN)

-ஆகிய காரணிகளில் எந்தெந்த காரணிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்? என்பதையும் முதலிலேயே தீர்மானம் செய்து கொள்ள வேண்டும்.

பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஒருவர் தனது வாழ்க்கை தொழிலை தேர்வு செய்தால் ,அவரது வாழ்க்கைத் தொழில் நிச்சயம் மாறுபாடாக தான் அமையும். அவர் தேர்ந்தெடுக்கின்ற மேற்படிப்பும் அவரது வாழ்க்கை சூழலும் வித்தியாசமாகவே அமையும் .

அதே வேளையில், தனது புத்திக்கூர்மைக்கு ( KNOWLEDGE) ஏற்ற வகையில் தனது படிப்பையும், வேலையையும் தேர்ந்தெடுக்காவிட்டால் வாழ்நாள் முழுவதும் அவர் வேதனை தீயில் வாடி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.

எனவேதான் ,வாழ்க்கைத் தொழிலை தேர்ந்தெடுக்கும் போது ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வாழ்க்கைத் தொழில் என்பது ஒருவர் வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டிய தொடர் செயல் அல்ல. அடிக்கடி தங்கள் வாழ்க்கை தொழிலை மாற்றிக் கொள்வது பலவித பிரச்சனைகளை உருவாக்கி விடும்.

சவால்களை ஏற்போம்...

ஒரு மனிதர் எந்த அளவுக்கு வாழ்க்கையில் சவால்களை ஏற்று கொள்ளுகிறாரோ? அந்த அளவுக்கு அவர் ஏற்றுக் கொண்டுள்ள தொழிலில் சிறப்பை பெறலாம். முன்பெல்லாம் கல்வி கற்பதன் முக்கியத்துவம் ஒரு மனிதனை நாகரீகத்தோடும் ,சமநிலையிலும் நல்வாழ்வு வாழ செய்வதற்காக அமைந்தது . ஆனால் ,மாறி வருகிற இந்த அவசர உலகில், கல்வியின் நோக்கம் பலவித மாற்றங்களையும் சவால்களையும் சந்தித்து வருகிறது.

கல்வி என்னும் முதலீடு...

இன்று கல்வி என்பதை "முதலீடு"(INVESTMENT )செய்வதற்கான ஒரு வாய்ப்பாக பலரும் கருதுகிறார்கள் .

கற்கின்ற கல்வியின் மூலம் பல வழிகளில் வருமானம் வரும வழிகளைத் தேடுகிறார்கள் .

லட்சக்கணக்கான பணத்தைச் செலவு செய்து எல்.கே.ஜி, யு.கே.ஜி முதல் பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரி படிப்பு வரையிலும் பல நிலைகளில் படிப்புக்காக செலவு செய்கிறார்கள் .

அதிகமாக பணம் செலவு செய்து ,சிறந்த கல்வியை தங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டால் ,தங்கள் பிள்ளைகள் தாங்கள் கற்ற கல்வியின் உதவியோடு பெருமளவில் எதிர்காலத்தில் பணத்தை சம்பாதித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் பல பெற்றோர்கள் கல்விக்காக முதலீடு செய்யும் பணத்தை அதிகரித்து வருகிறார்கள்.

இந்தச் சூழலில் தங்கள் வாழ்க்கைத் தொழிலை தேர்ந்தெடுக்க விரும்பும் இளைஞர்கள் முதலீடு செய்த பணத்தை திருப்பித்தர உதவும் "கல்வி வித்தையை" மட்டும் கற்றுக் கொள்ளாமல், நல்ல நேர்மறை மனப்பாங்கையும் (POSITIVE ATTITUDE) சிறப்புத் தகுதிகளையும் (SPECIAL QUALIFICATION) தனி திறன்களையும்(PERSONAL SKILLS) வளர்த்துக் கொள்வது வாழ்க்கையில் வெற்றி பெற அடிப்படைத் தேவை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .

இதனால்தான், வாழ்க்கைத் தொழில் திட்டமிடல் மிக அவசிய தேவையாக அமைகிறது. வாழ்க்கைக்கு உதவும் மென் திறன்கள் (SOFT SKILLS). ஒரு இளைஞனின் கல்விக்கான முதலீடு (INVESTMENT ),அந்த கல்வியின் மூலம் வரும் வருமானம் (INCOME/RETURN), அந்தக் குறிப்பிட்ட வருமானம் பெற தேவையான காலங்கள் ( PERIOD ) ஆகியவற்றை தீர்மானிப்பதில் ஒரு இளைஞனின் "மென் திறன்கள்" (SOFT SKILLS) முக்கிய பங்கு வகிக்கின்றன.

மென்திறன்கள் என்பது ஒருங்கிணைந்து செயல்படும்திறன் (TEAM SPIRIT), பகுத்தறியும் பண்பு (ANALYTICAL SKILL), தலைமைப் பண்பு (LEADERSHIP QUALITY), நெகிழ்வுத்தன்மை (FLEXIBILITY ) , நம்பிக்கையுடன் கூடிய நேர்மறை எண்ணம் (POSITIVE ATTITUDE) தன் ஊக்குவிப்புத் திறன்(INITIATIVE ), புத்தாக்க திறன் (CREATIVITY ), உற்சாகப்படுத்தும் திறன் (MOTIVATION SKILL), கற்றுக்கொள்ளும் திறன் (LEARNING SKILL), விழிப்புணர்வுடன் செயல்படுதல் ( AWARENESS )-போன்றவைகளை குறிக்கும் .

எனவேதான், "இளம் வயதினர் தங்கள் மேற்படிப்பை தேர்ந்தெடுக்கின்றபொழுது, அந்த படிப்பு தங்கள் அறிவை மட்டும் வளர்ப்பதற்கு பயன்படாமல் , தங்களது தனி திறன்களையும் வளர்ப்பதற்கு உதவும் படிப்பாக அமைய வேண்டும்.

வேகமாக மாறி வரும் தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட இன்றைய உலகில் சரியாக வாழ்க்கைப்பாதையை தேர்வு செய்வது ஒவ்வொருவரின் கடமையாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




 


Tags:    

மேலும் செய்திகள்