பிளஸ்-2 விற்கு பின் விரும்பிய படிப்பை தேர்ந்தெடுப்பது எப்படி?

திட்டமிடாத கல்வி மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களின் நிலைமை எரிகின்ற தீயின் அருகில் வைக்கோலை கொண்டு வைப்பதற்கு சமம்;

Update: 2024-06-03 04:19 GMT

சென்னை,

விரும்பிய படிப்பை குழப்பம் இல்லாமல் தேர்ந்தெடுக்க எளிய வழி ஒன்று உள்ளது. கீழே குறிப்பிட்டுள்ள ஐந்து முக்கிய காரணிகளை மனதில் நிறுத்தி, நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் முடிவுகளை மேற்கொண்டால் ,சிறந்த படிப்பை எளிதில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

1. உங்கள் குறிக்கோள் (YOUR GOAL)

2. உங்கள் விருப்பம் (YOUR INTEREST)

3. உங்கள் பெற்றோரின் விருப்பம்( YOUR PARENTS INTEREST)

4. உங்கள் குடும்ப நிதி நிலைமை ( FINANCIAL POSITION OF YOUR FAMILY)

5. உங்கள் மதிப்பெண்கள் ( YOUR MARKS)

இந்த ஐந்து காரணிகளும் ஒவ்வொருவருடைய குடும்பப் பின்னணிக்கு ஏற்ற மாறுபடும் தன்மை கொண்டவை ஆகும். எனவே, இவற்றை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் விரும்பிய படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும்.

1. உங்கள் குறிக்கோள் ( YOUR GOAL )

வாழ்க்கையில் உங்கள் குறிக்கோள் எது? என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, எத்தனையோ பணிகள் நம் கண் முன்னே தெரிகின்றன. எஞ்சினியர் , டாக்டர் , வங்கி அதிகாரி, காவல்துறை அதிகாரி , ரயில்வே அதிகாரி, மாவட்ட ஆட்சித் தலைவர், தாசில்தார் என பல்வேறு பணிகள் ,பதவிகள் .

இவைதவிர, பலவகையான தொழிலதிபர்களையும், வணிக நிறுவன உரிமையாளர்களையும் , பிரபலமானவர்களையும் நாம் நன்கு தெரிந்திருப்போம்.

நமக்குத் தெரிந்த அல்லது விருப்பமான எந்த பதவியை அடைய, எந்தவிதமான படிப்பை நாம் படிக்க வேண்டும்? எந்தவிதமான திறமைகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்? எந்தெந்த போட்டித் தேர்வுகளை எழுத வேண்டும்? அதற்கு இந்த கல்வி முறை அல்லது கல்வி நிலையம் துணை நிற்குமா? என்ற கேள்விகளை முன்கூட்டியே மனதில் எழுப்பி அதற்கான விடையையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதைப் போலவே, ஒரு தொழிலை தொடங்குவதற்கு முன்பே ,அந்த தொழிலை ஆரம்பிப்பதற்கு தேவையான அத்தனை தகவல்களையும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பு வழங்குகிறதா? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

எந்த ஊருக்கு போக வேண்டும்?

படிப்பின் குறிக்கோளை நிர்ணயிப்பது கிட்டத்தட்ட ஒரு பயணத்தை போலத்தான். எந்த ஊருக்கு போக வேண்டும்? என முடிவு செய்த பின்புதான், எப்படி போக வேண்டும் ?என்பதை முடிவு செய்ய வேண்டும்.

உதாரணமாக, திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு வயது சுமார் 55 இருக்கும். அவரிடம் ஒரு இளைஞர் சென்று "ஐயா ரொம்ப நேரமா இந்த பஸ் ஸ்டாண்ட்ல நின்னுகிட்டே இருக்கீங்களே? நீங்கள் எந்த ஊருக்கு போக வேண்டும்?"எனக் கேட்டார். அந்தப் பெரியவர் நிதானமாக பதில் தந்தார்.

" தம்பி.. எந்த ஊருக்கு போகணும்னு முடிவு செய்யல. ஏதாவது ஒரு பஸ் வரும். அந்த பஸ்ல ஏறி ,ஏதாவது ஒரு ஊருக்கு, எப்பவாவது போகலாம்னு இருக்கேன்"என்று பதில் தந்தால் ,அவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம்?.

''அவருக்கு என்ன ஆனது'', "மனநிலை சரியில்லைபோல'', "உலகம் புரியாதவர்"-என அவரை அவமானப்படுத்த தயாராகி விடுவோம் அல்லவா?

அவர் எந்த ஊருக்கு போக வேண்டும்? என்று சொன்னால்தான், எப்படி போக வேண்டும்? என அவருக்கு வழிகாட்ட இயலும்.

அதாவது ,எந்த ஊருக்கு போக வேண்டும் ? எனத் தெரிவித்தால்தான் எந்த பஸ்சில் போக வேண்டும்? என்று அந்த இளைஞனால் வழிகாட்ட முடியும்.

அந்த ஊருக்கு பஸ் போக்குவரத்து இல்லை என்றாலும் ,ஆட்டோ, வாடகை கார் போன்ற ஏதேனும் வாகனத்தில் செல்வதற்கு வழி சொல்ல இயலும்.

அதைப்போலவே, ஒரு ஊருக்கு செல்வதற்கு பல்வேறு சாலைகளும், வழிகளும் உள்ளன.

திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்வதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன? மதுரை திருச்சி விழுப்புரம் சென்னை மார்க்கமாக சென்னை செல்லலாம். தூத்துக்குடி, மதுரை, திருச்சி, விழுப்புரம் மார்க்கமாகவும் சென்னை செல்லலாம்.

திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் சென்று ,அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்லலாம். திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு வந்து, மும்பை சென்று ,அதன் பின்னர் சென்னைக்கு வரலாம்.

எந்த ஊருக்கும் எப்படியும் போகலாம். ஆனால் ,மிகக் குறைந்த நேரத்தில் மிகக் குறைந்த செலவில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதற்காக திட்டமிடுதல் மிக முக்கியமாகும்.

இதைப் போலத்தான், ஒரு படிப்பை எப்படியும் படிக்கலாம்?. மிகக் குறுகிய காலத்தில், அதிக செலவில்லாமல் படிப்பது எப்படி? என்பதை முன்கூட்டியே திட்டமிட்ட பின்புதான் ஒரு படிப்பில் சேர்ந்து படிக்க வேண்டும். சிலர், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் சேர்ந்து கொண்டு, மூன்று வருடத்தை முழுவதாக முடித்த பின்பு "இந்தப் படிப்பை படித்து முடித்து இருக்கிறேன். எனக்கு என்ன வேலை கிடைக்கும்?- என கேள்வி எழுப்பி அதற்கு சரியான விடை காண இயலாமல் தவிக்கிறார்கள்.

சிலர், டாக்டர் பட்டம் பெற்ற பின்பு கூட, பத்தாம் வகுப்பு (எஸ். எஸ். எல். சி) தகுதியாகக் கொண்ட டி.என்.பி.எஸ்சி(TNPSC) குரூப் -4 தேர்வு எழுதுகிறார்கள். இவையெல்லாம், காலம் கடந்த பின்பு ஞானம் வந்ததால் ஏற்பட்ட நிகழ்வு அல்லவா?

பள்ளியில் படிக்கும்போதே எதிர்காலத்தில் என்ன நிலையில் ,எந்தப் பதவியில் அல்லது எந்த தொழிலில் ஈடுபட வேண்டும் ?என்பதை முடிவு செய்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும். உங்களின் வாழ்க்கை குறிக்கோளை அடைவதற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவு துணை நிற்கிறதா? என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

2.உங்கள் விருப்பம் (YOUR INTEREST)

ஆர்வம் இல்லாமல் ஒரு பாட பிரிவை தேர்ந்தெடுத்து ஒருவர் படித்தால், அந்தப் படிப்பில் அவரால் நிச்சயம் வெற்றிக்கான இயலாது .எனவே, உங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவை தேர்வு செய்த படிப்பது நல்லது.

3.உங்கள் பெற்றோரின் விருப்பம் ( YOUR PARENTS INTEREST)

விரும்பிய பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கும்போது ,பெற்றோர்களின் விருப்பத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் .நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாடம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்கள் பெற்றோரிடம் மனம் திறந்து முன்கூட்டியே நேரடியாக சொல்லி விட வேண்டும் .

அதனை தவிர்த்து ,மேற்படிப்பில் சேர்ந்த பின்பு," நீங்கள் சொன்னதால்தான் நான் இந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்தேன் .அதனால்தான் மதிப்பெண்கள் குறைந்து விட்டது" என பெற்றோர் மீது வீண்பழி போடுவது நல்லதல்ல.

4.உங்கள் குடும்ப நிதி நிலைமை ( FINANCIAL POSITION OF YOUR FAMILY)

குடும்பத்தின் நிதிநிலைமை சரியாக அமையாவிட்டால், தான் விரும்பிய ஒரு பாடப்பிரிவில் சேர்ந்து படிப்பதற்கு ஒருவரால் இயலாத சூழ்நிலை ஏற்படும் . அதாவது ,சில பாடங்களை படிப்பதற்கு லட்சக்கணக்கில் பணம் செலவாகலாம். குடும்பநிதி நிலைமை,அதற்கு ஏற்றவாறு அமையாவிட்டால், வேறு படிப்பை தேர்ந்தெடுத்து மேற்படிப்பை மேற்கொள்வது நல்லது.

5.உங்கள் மதிப்பெண்கள் ( YOUR MARKS)

சில மாணவ -மாணவிகள் மிகக் குறைந்த மதிப்பெண்களை பெற்றபின்பும், மிகச்சிறந்த அதிக உழைப்பு தேவைப்படும் படிப்புகளில் சேர்வதற்கு ஆசைப்படுகிறார்கள்.

இதன்மூலம், தேவையில்லாத பிரச்சனைகள் உருவாக்கி விடும். எனவே, தேர்ந்தெடுக்கும் படிப்பில் சேர்வதற்குமுன்பு இப்போதுள்ள கல்விதகுதியின் துணையோடு மேற்படிப்பில் சிறப்பிடம் பெற இயலுமா? என்பதையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் .அதன் பின்னர் குறிப்பிட்ட பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.

தேவை அறிந்து படிப்போம் ஓட்டலுக்கு செல்லுகிறோம். விதவிதமான உணவு வகைகள் அங்கு உள்ளன .பல விதமான இனிப்பு வகைகளும் இருக்கின்றன. கார வகைகளில் வித்தியாசமாக எத்தனையோ ரகங்கள் உள்ளன .

ஓட்டலில் எல்லா உணவு வகைகளும் இருக்கிறது என்பதற்காக, ஏதேனும் ஒரு உணவை நமக்கு விருப்பம் இல்லாமல் நாம் வாங்கி உண்ண மாட்டோம். நமது உடலுக்கு ஏற்றவாறு உணவு வகைகளை நாம் தேர்ந்தெடுத்து உண்ணுகிறோம்.

இதைப் போலத்தான் எத்தனையோ விதவிதமான படிப்புகள் இருந்தாலும், நமக்கு ஏற்றவாறு படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பது வாழ்க்கையில் சிறப்பு பெறுவதற்கு வழிவகுக்கும்.

சிறந்த கல்லூரியை தேர்வு செய்வது எப்படி?

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கல்லூரிகள் இயங்குகின்றன. லட்சக்கணக்கான மாணவ- மாணவிகள் இந்த கல்வி நிறுவனங்களில் ஆண்டுதோறும் கல்வி பயில்கிறார்கள்.

தமிழகத்தில் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் என ஏராளமான கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

எந்தப் படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பது? என முடிவு செய்தாலும் எந்த கல்லூரியில் சேர்ந்து படிப்பது? என்பதை முடிவு செய்வதில்தான் சிலருக்கு குழப்பம் ஏற்பட்டு விடுகிறது

பொறியியல், மருத்துவம், வேளாண்மை, வணிகம், கம்ப்யூட்டர், அழகுக்கலை, அறிவியல் -என பல துறைகளைச் சார்ந்த படிப்புகள் இருந்தாலும் ,அந்தப் படிப்புகளை நடத்தும் எல்லா கல்லூரிகளிலும் எந்த விசாரிப்பும் இல்லாமல் உடனே சேர்ந்து விட முடியாது .தீர விசாரித்த பின்பு, ஒரு கல்லூரியில் சேர வேண்டும். அப்போதுதான் , ஒருவர் தான் தேர்ந்தெடுத்த படிப்பை சிறப்பான முறையில் படித்து முடித்து பட்டம் பெற இயலும்.

சிறந்த கல்லூரியை தேர்வு செய்ய ..

சிறந்த கல்லூரியை தேர்வு செய்ய கீழ்கண்ட குறிப்புகள் உங்களுக்கு உதவும்.

• கல்லூரி முறைப்படி அங்கீகாரம் பெற்றுள்ளதா ?என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் .

• கல்லூரியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தகுதியும் திறமையும் கொண்டவர்கள் தானா ?என்பதையும் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.

• கல்லூரியில் ஆசிரியர் -மாணவர் உறவு எந்த நிலையில் இருக்கிறது ?என்பதையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

• வகுப்பறைகள் காற்றோட்டம் உள்ளதாகவும், சுத்தமாகவும், தேவையான இருக்கைகள் கொண்டதாகவும் அமைக்கப்பட்டிருக்கிறதா ?என்பதையும் கல்லூரிக்கு நேரில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

• கல்லூரியில் போதுமான ஆய்வக வசதி உள்ளதா ?என்பதையும் நேரில் பார்த்து உறுதி செய்யுங்கள் .

• கல்லூரியில் படிக்கும் மாணவர்களை நேரில் சந்தித்து, அந்த கல்லூரி பற்றிய அனைத்து விவரங்களையும் முன்னதாகவே திரட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

• இணையதளத்தில் கல்லூரி வெளியிட்டு இருக்கும் தகவல்கள் உண்மையானதுதானா ?என்பதையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

• கல்லூரி நிர்வாகம் மாணவ -மாணவிகளுக்கு போதுமான வேலை வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தி தந்திருக்கிறதா ?என்பதையும் ,கல்லூரியில் படித்து முடித்து பணி வாய்ப்புகள் பெற்ற முன்னாள் மாணவர்களிடமும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

இத்தனை விவரங்களையும் ஒரு கல்வி நிலையத்தில் சேர்வதற்கு முன்பே தெரிந்து வைத்துக் கொண்டால் மட்டுமே ,சிறந்த முறையில் படித்து நல்ல பணியில் சேர்ந்து அல்லது நல்ல தொழிலை உருவாக்கி சிறந்த வாழ்க்கையை வாழ இயலும்.

"வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைதூறு போலக் கெடும்"

-என்பது வள்ளுவர் வாக்கு.

"பின்னால் வருகின்ற சூழ்நிலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு ,அதற்கு தகுந்தாற்போல வாழ பழகிக் கொண்டால், எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையும்". "திட்டமிடாத கல்வி மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களின் நிலைமை எரிகின்ற தீயின் அருகில் வைக்கோலை கொண்டு வைப்பதற்கு சமம் "என்பது தெய்வப் புலவர் திருவள்ளுவரின் அசைக்க முடியாத நம்பிக்கை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


Tags:    

மேலும் செய்திகள்