யமுனை நதி விவகாரம்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.;

புதுடெல்லி,
பா.ஜ.க. ஆட்சி செய்து வரும் அரியானாவில் இருந்து டெல்லிக்கு வரும் யமுனை ஆற்றில் விஷம் கலக்கப்பட்டு உள்ளது என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் யமுனை ஆற்றில் விஷம் கலக்கப்படுவதற்கு முன்பு டெல்லி நீர் வாரியத்தின் என்ஜினீயர்கள் சரியான தருணத்தில் கண்டறிந்து, தடுத்தனர். இல்லையெனில் இனப்படுகொலை எனும் அளவுக்கு அதிக அளவிலான மக்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள். நீருடன் விஷம் கலப்பதற்கு முன்பே அது தடுக்கப்பட்டது என கூறினார். இந்த கருத்துக்கு பல்வேறு கட்சியினரும் எதிரிப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த கருத்து டெல்லி மற்றும் அரியானா மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சை குறித்து அரியானா அரசு சோனிபட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த சர்ச்சை தொடர்பாக கெஜ்ரிவால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கெஜ்ரிவாலின் கருத்துக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினரும் ஈடுபட்டுள்ளனர்.