காட்டுப்பகுதியில் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டிருந்த பெண் மீட்பு - நடந்தது என்ன?

அவரிடம் இருந்து அமெரிக்க பாஸ்போர்ட்டின் நகல் மற்றும் தமிழக முகவரி கொண்ட ஆதார் கார்டு கண்டெடுக்கப்பட்டது.

Update: 2024-07-29 11:29 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் சிந்தர்க் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மரத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை சோனுருளி கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் நபர் காட்டுக்குள் பெண்ணின் அழுகுரலை கேட்டு அங்கு சென்று பார்த்ததில் பெண் மரத்துடன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்து வந்த போலீஸ் நடத்திய சோதனையில் பெண்ணின் உடைமைகளை சோதித்ததில் அவரிடம் இருந்து அமெரிக்க பாஸ்போர்ட்டின் நகல் மற்றும் தமிழக முகவரி கொண்ட ஆதார் கார்டு, மருந்து மாத்திரை பரிந்துரைச் சீட்டு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த பெண் மீட்கப்பட்டு அருகில் இருந்த கொங்கன் பகுதியில் உள்ள சவாந்வேதி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அவரது மனம் மற்றும் உடல் நிலைமை மிகவும் மோசமானதாக இருந்ததால் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

அவர் இப்போது நலமாக உள்ளதாகவும், மன ரீதியான பிரச்சினைக்கு அவர் ஆளாகியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட அவரது பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டில் அவரது பெயர் லலிதா காயி என்று உள்ளது. அவரது விசாவும் முடிவடைந்துள்ளது.

காட்டில் பலநாள் பசியுடன் கடும் மழையில் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்ததால் அவரின் உடல் நிலை கருதி தகவல்களைப் பெற முடியவில்லை. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசிய போலீசார், அந்தப் பெண் வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை. சில நாட்களாக எதுவும் சாப்பிடாததாலும், வனப் பகுதியில் கனமழை பெய்ததாலும் அந்தப் பெண் பலவீனமாக இருக்கிறார். எவ்வளவு நேரம் அவர் கட்டிவைக்கப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியாது. தமிழகத்தைச் சேர்ந்த அவரது கணவர் மனநலம் பாதிக்கப்பட்ட இப்பெண்ணை இங்கே கட்டி வைத்துவிட்டு தப்பி ஓடியிருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்.

முதற்கட்ட தகவலின் படி, கடந்த 10 வருடங்களாக அந்த பெண் இந்தியாவில் இருப்பது தெரியவந்துள்ளது. பெண்ணின் உறவினர்களை கண்டுபிடிக்க எங்கள் குழுவினர் தமிழகம், கோவா போன்ற பகுதிகளுக்குச் சென்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்