டெல்லி முதல் மந்திரி யார்? - பாஜக ஆலோசனை
முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்காக டெல்லியில் இன்று பாஜக உயர்மட்ட கமிட்டி கூட்டம் நடைபெற்றது.;
புதுடெல்லி,
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவு நேற்று வெளியானது. இதில் 48 இடங்களில் அமோக வெற்றி பெற்று, 27 ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மி 22 இடங்களை மட்டுமே பிடித்தது.
முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்தார். கடந்த 2 முறை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கட்டிலில் இருந்த ஆம் ஆத்மி கட்சி, தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் பெரும் பின்னடைவை சந்தித்தது.
இந்த நிலையில், டெல்லியின் புதிய முதல்-மந்திரி யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. முதல்-மந்திரி பதவியை பிடிப்பதில் பர்வேஷ் வர்மா, விஜேந்தர் குப்தா, மன் ஜிந்தர் சிங் சிர்சா, துஷ்யந்த் கவுதம், ஹரிஷ் குரானா ஆகிய 5 பேர் முன்னிலையில் உள்ளனர். முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்காக டெல்லியில் இன்று பாஜக உயர்மட்ட கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
இதனிடையே பிரதமர் மோடி நாளை பிரான்ஸ் புறப்பட்டு செல்கிறார். பின்னர் அங்கிருந்து 12-ம் தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு அவர் டிரம்பை சந்தித்து பேசுகிறார். அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி இந்தியா திரும்பிய பிறகே டெல்லியில் ஆட்சி அமைக்க கவர்னரிடம் பாஜக உரிமை கோர உள்ளது. எனவே பிரதமர் மோடி டெல்லி திரும்பியதும் முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. வருகிற 15-ம் தேதிக்கு பிறகே முதல்-மந்திரி பதவி ஏற்க வாய்ப்பு உள்ளது.