என்ன வரிசையா அடுக்குறாங்க... இந்த குரங்கு ரொட்டி போடும், பாத்திரம் கழுவும்: வைரலான வீடியோ
உத்தர பிரதேசத்தில் குரங்கு ஒன்று வீட்டு வேலைகளை செய்து அசத்தும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.;
ரேபரேலி,
குரங்கு என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது, அது ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்கு தாவும். பழம், பொரி உள்ளிட்ட பைகளை கொண்டு சென்றால் அவற்றை பறித்து செல்லும். பொதுவாக அவை சேட்டைகள் செய்யும் என்பது மட்டுமே நமக்கு தெரியும்.
ஆனால், உத்தர பிரதேசத்தில் குரங்கு ஒன்று மனிதர்களுடன் நன்றாக பழகி வருகிறது. இது வேலை செய்யும் குரங்கு என அந்த பகுதி நபர்களால் அழைக்கப்படுகிறது. உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில் சத்வா கிராமத்தில் விஸ்வநாத் என்ற விவசாயி வசித்து வருகிறார்.
8 ஆண்டுகளுக்கு முன்பு குரங்கு கூட்டம் ஒன்று அந்த வழியே சென்றது. அப்போது, அதில் குரங்கு ஒன்று கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்று வழிதெரியாமல் தனியே நின்றுள்ளது. அப்போது, விஸ்வநாத்தின் மனைவி அதற்கு உதவி செய்துள்ளார். அதில் இருந்து, அந்த குரங்குக்கு மனிதர்களுடனான தனித்துவ பிணைப்பு வளர தொடங்கியது.
அந்த குரங்கு, காலையில் எழுவது முதல் அமர்வது, சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது மற்றும் உறங்குவது என அந்த நாளின் ஒவ்வொரு விசயத்திலும் மனிதர்களுடன் இணைந்து செயல்பட்டது. மனிதர்கள் செய்ய கூடிய வேலைகளை திறமையாக செய்து முடிக்கும் தன்மையை கொண்டுள்ளது. ராணி என்ற பெயரிடப்பட்ட அந்த குரங்கு கடந்த 8 ஆண்டுகளாக விஸ்வநாத் குடும்பத்தில் ஒருவராக வளர்ந்து வருகிறது.
ரொட்டி போடுவது, தட்டு, தம்ளர் உள்ளிட்ட பாத்திரங்களை கழுவுவது மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து மொபைல் போனில் வீடியோக்களை பார்ப்பது என மனிதர்களுடன் ஒன்றாக கலந்து விட்டது. இதுபற்றிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதில், வரிசையாக பாத்திரங்களை கொண்டு வந்து அடுக்கினாலும், அதனை ஒவ்வொன்றாக கழுவி தூய்மைப்படுத்துகிறது. வீட்டுக்கு தேவையான ரொட்டியை தேய்க்கும் வேலையை செய்கிறது. வீட்டு கதவை திறந்து விடுகிறது. இதுபோன்று பல வீட்டு வேலைகளை செய்து அசத்துகிறது.