வயநாடு தொகுதி இடைத்தேர்தல்: 23-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் பிரியங்கா காந்தி

வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 13ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Update: 2024-10-19 06:57 GMT

கோப்புப்படம்

திருவனந்தபுரம்,

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த 2 தொகுதிகளிலும் ராகுல்காந்தி அபார வெற்றி பெற்றார்.

அதேவேளை, ராகுல் காந்தி ஏதேனும் ஒரு தொகுதியில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதையடுத்து, வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்தது. இதன் மூலம் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வயநாடு தொகுதிக்கு வரும் நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அங்கு உடனடியாக அமலுக்கு வந்தன. வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகேரியும் போட்டியிடுகின்றனர். பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடப்போவது யார்? என்பதை அந்த கட்சி இன்னும் அறிவிக்கவில்லை.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் வருகிற 22-ந்தேதி கேரளா வருகிறார். மறுநாள் (23-ந்தேதி) வேட்பு மனுவை தாக்கல் செய்யும் அவர், பின்பு பிரசாரத்தை தொடங்க உள்ளார். அவர் வயநாடு தொகுதியில் 10 நாட்கள் வரை பிரசாரத்தில் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது. அப்போது பிரியங்கா காந்தியுடன், ராகுல் காந்தியும் உடன் வந்து பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனிடையே வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வருகிற 25-ந்தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். வேட்புமனுவை திரும்பப்பெற வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 13-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ந்தேதி நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்