பயங்கரவாதியாக விரும்பினேன்... காஷ்மீர் சட்டசபையில் எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு
காஷ்மீர் சட்டசபையில் பேசிய எம்.எல்.ஏ. லோனே, ராணுவ அதிகாரியின் சித்ரவதையால், பயங்கரவாதியாகி விடலாம் என விரும்பினேன் என்று கூறினார்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டசபையில் கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் கலந்து கொண்டு தேசிய மாநாட்டு கட்சியின் எம்.எல்.ஏ. கெய்சர் ஜாம்ஷெட் லோன் பேசினார். அவர் பேசும்போது, அப்போது நான் பருவவயது அடைந்த சிறுவனாக இருந்தேன். ராணுவ அதிகாரி ஒருவரின் சித்ரவதைக்கு ஆளானேன். அவமதிக்கப்பட்டேன். இதனால், பயங்கரவாதியாகி விடலாம் என விரும்பினேன் என்று கூறினார்.
ஆனால், மூத்த அதிகாரி ஒருவரின் நடவடிக்கையால், எனக்கு நம்பிக்கை திரும்ப வந்தது. அந்த மூத்த அதிகாரி இவரிடம் பேசினார். இதன்பின்பு, அந்த ஜூனியர் அதிகாரியை அவர் கடிந்து கொண்டார் என்றார். இந்த சம்பவம், சிக்கலான விவகாரங்களுக்கு பேச்சுவார்த்தை வழியே எப்படி தீர்வு காணலாம் என காட்டியது என்றும் பேசியுள்ளார்.
அவர் சபையில் பேசும்போது, நான் இளைஞனாக இருந்தபோது நடந்த ஒரு சம்பவம். அப்போது, 10-ம் வகுப்பு படித்து கொண்டு இருந்திருப்பேன் என நினைக்கிறேன். என்னையும் சேர்த்து 32 இளைஞர்கள் இருந்தோம். விசாரணைக்காக நாங்கள் அழைத்து செல்லப்பட்டோம்.
அதில் ராணுவ அதிகாரி ஒருவர் என்னிடம், பயங்கரவாத குழுவில் சேர்ந்த இளைஞர் ஒருவரை பற்றி கேட்டார். அந்நபரை எனக்கு தெரியும் என நான் கூறினேன். ஏனெனில், அவர் எங்களுடைய பகுதியை சேர்ந்தவர். இதற்காக அடி வாங்கினேன். சட்டவிரோத செயலில் அந்த இளைஞர் ஈடுபட்டாரா? என அவர் கேட்டார். நான் இல்லை என்றேன். அதற்கு மீண்டும் அடி விழுந்தது என்றார்.
அப்போது வந்த மூத்த அதிகாரி ஒருவர், நீ வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறாய்? என என்னிடம் கேட்டார். அதற்கு அவரிடம் நான், பயங்கரவாதியாக விரும்புகிறேன் என கூறினேன். அதற்கான காரணம் பற்றியும் கேட்டார். அந்த ஜுனியர் ராணுவ அதிகாரியின் விசாரணை பற்றி கூறினேன் என்றார். தொடர்ந்து அவர், அந்த 32 இளைஞர்களில் 27 பேர் பின்னர் பயங்கரவாத குழுவில் சேர்ந்து விட்டனர் என தெரிந்து கொண்டேன் என்றும் பேசினார்.