முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி - ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு
குடியரசு தின விழாவின் நிறைவாக முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.;
புதுடெல்லி,
நாட்டின் 76-வது குடியரசு தின விழா ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது . 76-வது குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றினார். பின்னர் 21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
குடியரசு தின கொண்டாட்டங்கள் டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதை (கடமை பாதை) பகுதியில் நடைபெற்றது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவா பங்கேற்றார். தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிலையில், குடியரசு தின விழாவின் நிறைவாக முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. குடியரசு தினம் முடிந்த 3-வது நாளில் பாசறை திரும்புவது வழக்கமாகும். இதன்படி, டெல்லி விஜய் சவுக் பகுதியில் ராணுவ இசைக்குழுவினரின் இசைக்கருவிகள் முழங்க தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை வீரர்கள் பாசறைக்கு திரும்பினர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.