ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உ.பி. தொழிலாளி காயம்

கடந்த ஒரு வாரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட 3வது தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-10-24 07:28 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

காயமடைந்த தொழிலாளி உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் என்ற பகுதியை சேர்ந்த ஷுபம் குமார் (19) ஆவார். டிராலில் உள்ள படகுண்ட் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அவர் கைகளில் குண்டுக்காயம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குமார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் நலமாக உள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, கடந்த 20ம் தேதி ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் கட்டுமான தளம் ஒன்றில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உள்ளூர் டாக்டர் ஒருவர், 6 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதேபோல கடந்த 18ம் தேதி ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பீகாரை சேர்ந்த ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்