குற்றவியல் விசாரணையில் இருந்து கவர்னர்களுக்கு விலக்கு: சட்டத்தை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு சம்மதம்

குற்றவியல் விசாரணையில் இருந்து கவர்னர்களுக்கு விலக்கு அளிக்கும் சட்டத்தை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு சம்மதம் தெரிவித்துள்ளது.

Update: 2024-07-19 09:34 GMT

புதுடெல்லி,

மேற்கு வங்காள கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் மீது ராஜ்பவனில் பணிபுரியும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் கொல்கத்தா போலீசாரிடம் பாலியல் புகார் அளித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ஆனந்த போஸ், புகாரில் கூறப்பட்டுள்ள நாளான மே 2-ந்தேதி அன்று மாலை 5.32 மணி முதல் 6.41 மணி வரை கவர்னர் மாளிகையின் வடக்கு வாசலில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களிடம் சிலரிடம் கவர்னர் மாளிகையில் திரையிட்டுக் காட்டினார்.

இந்த பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்திற்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் கவர்னர் மாளிகைக்கு செல்ல தங்களுக்கு பயமாக உள்ளது என சில பெண்கள் தன்னிடம் கூறியதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்தார். இதனை கண்டித்து மம்தா பானர்ஜி மீது ஆனந்த போஸ் கடந்த ஜூன் 28-ந்தேதி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

இதனிடையே குற்றவியல் விசாரணையில் இருந்து கவர்னர்களுக்கு விலக்கு அளிக்கும் சட்டப்பிரிவு 361-ஐ ஆய்வு செய்ய வேண்டும் எனக்கோரி, ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் அளித்த பெண் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றவியல் விசாரணையில் இருந்து கவர்னர்களுக்கு விலக்கு அளிக்கும் சட்டத்தை ஆய்வு செய்ய சம்மதம் தெரிவித்தனர். மேலும் இந்த மனு தொடர்பாக பதிலளிக்க மேற்கு வங்காள அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பையும் இணைக்க மனுதாரருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்