ராஜினாமா செய்யும் கெஜ்ரிவால்: டெல்லியில் அடுத்த முதல் மந்திரி யார்?

முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகுவதாக கெஜ்ரிவால் நேற்று திடீரென அறிவித்தார்

Update: 2024-09-16 07:35 GMT

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலுக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ஜூன் 1-ந் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி மே 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் பின்னர் ஜூன் 2-ந் தேதி மீண்டும் சிறைக்கு திரும்பினார். பின்னர் இந்த வழக்கில் அவருக்கு கடந்த ஜூலை 12-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு இடைக் கால ஜாமீன் அளித்தது.

ஆனால் மதுபானக்கொள்கையை நிறைவேற்றியதில் நடந்த ஊழல் தொடர்பாக கெஜ்ரிவாலை ஜூன் 26-ந் தேதியே சி.பி.ஐ. கைது செய்திருந்தது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. கைது செய்த வழக்கிலும் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டை அவர் அணுகினார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கெஜ்ரிவாலுக்கு கடந்த 13-ந் தேதி ஜாமீன் வழங்கியது. அன்று மாலையிலேயே அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.அதேநேரம் அவர் தலைமை செயலகத்துக்கு செல்லக்கூடாது, கோப்புகளில் கையெழுத்து போடக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை சுப்ரீம் கோர்ட்டு விதித்து இருந்தது. இதனால் கெஜ்ரிவால் பதவி யில் நீடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடமும், டெல்லி மக்களிடமும் எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகுவதாக கெஜ்ரிவால் நேற்று திடீரென அறிவித்தார்.

கெஜ்ரிவாலின் இந்த திடீர் அறிவிப்பு ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.அதேநேரம் கெஜ்ரிவால் பதவி விலகுவதால், டெல்லியின் அடுத்த முதல்-மந்திரி யார்? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது. கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா அல்லது மந்திரிகள் அதிஷி, கோபால் ராய் ஆகியோரில் ஒருவர் அடுத்த முதல்-மந்திரியாகும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வருவாய்த்துறை முன்னாள் அதிகாரியான சுனிதா, அரசு மற்றும் நிர்வாகம் குறித்து நன்கு அறிந்தவர்.அதேநேரம் டெல்லி மந்திரிகளில் 14 துறைகளை கவனித்து வரும் அதிஷி, கெஜ்ரிவால் கைதுக்குப்பின் மாநில அரசை வழிநடத்தியதில் முக்கிய பங்கு வகித்தார். எனவே அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. எது எப்படியோ..நாளை இந்த கேள்விக்கு விடை கிடைத்து விடும்.

Tags:    

மேலும் செய்திகள்