யமுனை நதியில் கெஜ்ரிவால் குளிப்பாரா? ராகுல் காந்தி சவால்

5 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதியளித்தபடி யமுனை நீரைக் குடிக்க நான் அவருக்கு சவால் விடுகிறேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.;

Update:2025-01-30 18:18 IST
யமுனை நதியில் கெஜ்ரிவால் குளிப்பாரா? ராகுல் காந்தி சவால்

புதுடெல்லி,

டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி பிரசாரத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, யமுனை நதியில் அரியானா பா.ஜனதா அரசு நச்சை கலந்து மாசடைய வைத்துள்ளது என்று குற்றச் சாட்டை தெரிவித்தார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா புகார் தெரிவித்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் உரிய ஆதாரங்களை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்த நிலையில் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சவால் ஒன்றை விடுத்துள்ளார். கிழக்கு டெல்லியின் பவானா பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி கூறும்போது, கெஜ்ரிவால் ஒரு ஊழல் நிறைந்த அரசாங்கத்தை நடத்தினார். மோடி தனது உரைகளில் பொய் சொல்கிறார்.

அவரைப் போலவே, கெஜ்ரிவாலும் செய்கிறார். முந்தைய தேர்தலில் யமுனை நதியை தூய்மைப் படுத்தி அதில் குளித்து நீரை குடிப்பேன் என்று கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் அதை செய்வில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதியளித்தபடி யமுனை நீரைக் குடிக்க நான் அவருக்கு சவால் விடுகிறேன். நீங்கள் யமுனையின் தண்ணீரைக் குடித்து விட்டு, பிறகு உங்களை மருத்துவமனையில் சந்திக்கிறேன்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்