ஹத்ராஸ் செல்கிறார் ராகுல் காந்தி: பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கிறார்

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.;

Update:2024-07-04 18:09 IST
ஹத்ராஸ் செல்கிறார் ராகுல் காந்தி: பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கிறார்

கோப்புப்படம்

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற இந்து மத போதகரின் சத்சங்கம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நிலையில், மதபோதகர் போலே பாபா மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தபோது, மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு அவரை நோக்கி முன்னே சென்றனர்.

இதில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 121 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சத்சங்க நிகழ்ச்சியின் ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த சேவகர்கள் 6 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் மூத்த சேவகரான தேவ்பிரகாஷ் மதுகருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும், அவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அலிகார் ஐ.ஜி. ஷலப் மாத்தூர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், "இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹத்ராசில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அவர் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடுவார்" என்று அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து ஆர்.ஜே.டி. தலைவர் மனோஜ் ஜா கூறுகையில், "இதுபோன்ற விபத்துகளுக்கு எத்தனை கமிட்டிகள் அமைக்கப்பட்டன..? 2 நாட்களுக்குப் பிறகு இந்த விஷயத்தைப் பற்றி எந்த விவாதமும் நடக்காது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த தேசம் விபத்துகளின் தேசமாக மாறிவிட்டது ... நகரத்தின் உள்ளூர் நிர்வாகத்திற்கு மக்கள் கூட்டம் தெரியவில்லையா? இதெல்லாம் வெறும் கண்துடைப்புதான்" என்று கூறினார்.

முன்னதாக உள்ளூர் நிர்வாகத்தின் கூற்றுப்படி, மதபோதகர் போலே பாபா உரையாற்றிய மதக் கூட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது. மதபோதகரின் சீடர்கள் அவர் நடந்து செல்லும் போது அவரது காலடி மண்ணை எடுக்க விரும்பினர், இது கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்தது. நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் 80,000 பேர் கூடுவதற்கு அனுமதி பெற்றிருந்தனர். இருப்பினும், 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் வந்திருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்