ஆயுதங்களை கீழே போடுங்கள்; வளர்ச்சி பணியில் பயணியுங்கள் - நக்சலைட்டுகளுக்கு அமித்ஷா வலியுறுத்தல்
எங்களுடைய பழங்குடியின சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் வளர்ச்சியை நக்சலைட்டுகளால் தடுத்து நிறுத்த முடியாது என அமித்ஷா கூறினார்.;

தன்டேவாடா,
சத்தீஷ்காரில் அரசு சார்பில் நடத்தப்படும் பஸ்தார் பண்டும் என்ற நிகழ்ச்சியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, 2026-ம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியில் அரசு தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறது.
பஸ்தாரில் துப்பாக்கி குண்டுகள் சுடப்படுவதும், வெடிகுண்டுகள் வெடிக்கப்படுவதும் என சென்ற நாட்கள் தற்போது முடிந்து விட்டன. நக்சலைட்டு சகோதரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, எங்களுடன் இயல்பு வாழ்க்கையில் இணையுங்கள். நீங்கள் எங்களுக்கு உரியவர்கள். நக்சலைட்டு ஒருவர் கொல்லப்படும்போது, எவரும் மகிழ்ச்சி அடைவதில்லை.
உங்களுடைய ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். ஆயுதங்களை கையில் எடுத்து கொண்டு, எங்களுடைய பழங்குடியின சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் வளர்ச்சியை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.
வளர்ச்சிக்கான பணியின் ஒரு பகுதியாக, சரணடைந்த நக்சலைட்டுகளுக்கு முழு அளவில் மாநில மற்றும் மத்திய அரசுகளால் பாதுகாப்பு வழங்கப்படும் என கூறினார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, இந்த பகுதிக்கு வளர்ச்சி தேவையாக உள்ளது. 50 ஆண்டுகளில் இந்த பகுதி வளர்ச்சியை காணவில்லை. பஸ்தார் பகுதிக்கு 5 ஆண்டுகளில் எல்லாவற்றையும் தருவதற்கு பிரதமர் மோடி விரும்புகிறார்.
எனினும், குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது, தாலுகாக்களுக்கு சுகாதார வசதிகளை அளிக்கும்போது அந்த வளர்ச்சி ஏற்படும். ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை, ரேசன் அட்டை மற்றும் சுகாதார காப்பீடு ஆகியவை உள்ளது என்றார். நக்சலைட்டுகள் இல்லாத வீடுகள் மற்றும் கிராமங்களை உருவாக்குவோம் என பஸ்தார் மக்கள் முடிவு செய்யும்போதே வளர்ச்சி ஏற்படும் என்றார்.
2025-ம் ஆண்டில் மொத்தம் 521 நக்சலைட்டுகள் ஆயுதங்களை விடுத்துள்ளனர். 2024-ம் ஆண்டில் 881 பேர் சரணடைந்து உள்ளனர். வளர்ச்சிக்கு ஆயுதங்களோ, சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளோ மற்றும் எறிகுண்டுகளோ தேவை இல்லை என்றும், கணினிகளும், எழுதுகோல்களுமே தேவை என அறிந்த நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர் என அவர் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சி அடுத்த ஆண்டு, தேசிய அளவில் நடத்தப்படும் என கூறிய அமித்ஷா, ஜனாதிபதி திரவுபதி முர்முவை கொண்டு அந்த நிகழ்ச்சியை நடத்த கேட்டு கொள்ளப்படும் என்றும் கூறினார்.