'பாகிஸ்தான் வாழ்க' சொன்னவருக்கு நூதன தண்டனை: வீடியோ வைரலானது

தேசியக் கொடிக்கு 21 முறை வணக்கம் தெரிவிக்குமாறும், ‘பாரத மாதாகி ஜே’ என்று கூறுமாறும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

Update: 2024-10-23 02:19 GMT

போபால்,

மத்திய பிரதேசத்தை சேர்ந்த பைசல் நிசார் என்ற வாலிபர், சமூக வலைத்தள வீடியோவில் 'பாகிஸ்தான் வாழ்க' என்றும் 'இந்தியா ஒழிக' என்றும் கோஷம் எழுப்பி இருந்தார். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீன் கோரி விண்ணப்பித்தார். மனுவை விசாரித்த மத்திய பிரதேச ஐகோர்ட்டு, ரூ.50 ஆயிரம் சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கு மற்றொருவரின் உத்தரவாதத்தின் பேரிலும் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அப்போது ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் நான்காவது செவ்வாய்க் கிழமைகளில் ஜபல்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி, மூவர்ண தேசிய கொடியை வணங்கி, 21 முறை 'பாரத் மாதா கி ஜே' என கோஷமிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.

நேற்று மாதத்தின் 4-வது செவ்வாய்க்கிழமை என்பதால், ஜாமீனில் உள்ள பைசல், கோர்ட்டு உத்தரவை ஏற்று ஜபல்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அங்கு அவர் தேசிய கொடியை வணங்கி 21 முறை பாரத் மாதாகி ஜே என்று முழக்கமிட்டார். இதை ஏராளமான ஊடகத்தினர் பதிவு செய்தனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், "யாரும் நாட்டிற்கு எதிராக பேச வேண்டாம். நான் தவறு செய்ததை ஏற்றுக்கொள்கிறேன். கோர்ட்டு உத்தரவை நான் கடைப்பிடிப்பேன். இனிமேல் இதுபோன்ற தவறை செய்ய வேண்டாம் என மற்றவர்களிடமும் கூறுவேன்" என்றார்.



Tags:    

மேலும் செய்திகள்