பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் மாலத்தீவு அதிபர்
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
புதுடெல்லி,
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5 நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். மனைவி சஜிதாவுடன் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த அவரை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் நேரில் வரவேற்றார்.
அதனை தொடர்ந்து நேற்று மாலை மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர்.
இந்த நிலையில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பிரதமர் மோடியை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தை இருநாடுகள் இடையேயான நட்புறவுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.