வயநாடு நிலச்சரிவு: நிவாரணத் தொகையில் இ.எம்.ஐ. பிடித்தம் செய்த வங்கிகள் - பினராயி விஜயன் கண்டனம்

வங்கிக் கணக்கின் வழியே வழங்கப்பட்ட நிவாரணத் தொகையில், வங்கிகள் இ.எம்.ஐ. பிடித்தம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2024-08-19 15:49 IST

கோப்புப்படம்

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பேரிடரில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுவரை 231 உடல்களும், 206 உடல் பாகங்களும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.

நிலச்சரிவில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். மேலும், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவித்து உடனடியாக நிவாரணத் தொகைகளை வழங்க மத்திய அரசிடம் கேரள அரசு கோரிக்கை வைத்தது.

இதையடுத்து மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் கேரள மக்களுக்காக நிதியுதவி செய்து வருகின்றனர் .

இந்நிலையில், வங்கிக் கணக்கின் வழியே வழங்கப்பட்ட நிவாரணத் தொகையில், வங்கிகள் இ.எம்.ஐ. பிடித்தம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிவாரண நிதியில் இருந்து இ.எம்.ஐ.-யை தானாக கழித்ததற்காக கேரள வங்கியை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விமர்சனம் செய்தார்.

இதுதொடர்பாக மாநில அளவிலான வங்கிகள் கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசிய அவர், "நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் வட்டித் தொகையில் தளர்வு அல்லது மாதாந்திர தவணை செலுத்துவதற்கான கால நீட்டிப்பு ஆகியவை தீர்வாக இருக்காது. கடன்களை தள்ளுபடி செய்வதால் வங்கிகள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்படுத்தாது. கடனைப் பெற்றவர்களில் பலர் இறந்துவிட்டனர். அவர்களது வீடுகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்வதே சரியாக இருக்கும்" என்று பினராயி விஜயன் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்