நடுத்தர மக்களுக்கு பட்ஜெட்டில் எதுவும் இல்லை: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றச்சாட்டு
மேற்கு வங்காள மாநிலத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் எதுவும் கிடைக்கவில்லை என அபிஷேக் பானர்ஜி கூறினார்.;

புதுடெல்லி:
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட்டை வரவேற்றும், விமர்சித்தும் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு எதுவும் இல்லை என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறி உள்ளனர்.
பட்ஜெட் தாக்கலுக்குபின் நாடாளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கு நன்மை பயக்கும் அம்சங்கள் எதுவும் இல்லை. பீகார் தேர்தலை மனதில் வைத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து அறிவிப்புகளும் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்காக உள்ளன. ஆந்திர தேர்தல் முடிந்துவிட்டது. பீகார் தேர்தல் இனி வர உள்ளது. அதனால் அந்த இரண்டு மாநிலங்கள் மீதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தைப் பொருத்தவரை, கடந்த 10 ஆண்டுகளில் எதுவும் கிடைக்கவில்லை. இந்த பட்ஜெட்டிலும் எதுவும் இல்லை. இது துரதிர்ஷ்டவசமானது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட விதத்தில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. வெவ்வேறு சம்பள அடுக்குகளுக்கு வெவ்வேறு வரி தள்ளுபடிகள் இருக்கும் என அவர் (நிர்மலா சீதாராமன்) கூறினார். நடுத்தர மக்களுக்கு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், துப்பாக்கி தோட்டா காயங்களுக்கு பேண்டேஜ் போடப்பட்டுள்ளதாக கூறி உள்ளார்.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், நமது பொருளாதார நெருக்கடியை சரி செய்வதற்கு ஒரு முன்னுதாரணமான மாற்றம் தேவைப்பட்டது, ஆனால் இந்த அரசாங்கம் யோசனைகள் எதுவும் இல்லாமல் திவாலாகி விட்டது என்றும் ராகுல் விமர்சித்துள்ளார்.
தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் பேசும்போது, "இந்த பட்ஜெட் நாட்டிற்கு, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிய ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் ஆகும். ரூ.12 லட்சம் வரை வரி விலக்கு வழங்குவதாக நிதி மந்திரி கூறுகிறார், ஆனால் அடுத்த வரியில், ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 10 சதவீத வரி வரம்பு உள்ளது. பீகார் தேர்தல் வருவதால் அந்த மாநிலத்திற்கு அதிக அறிவிப்புகள் உள்ளன. பீகார் மக்களை மீண்டும் முட்டாளாக்குகிறார்கள்" என்றார்.