ஜெகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு

மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-12-19 16:39 GMT

புதுடெல்லி,

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், நாடாளுமன்ற மாநிலங்களவையின் அவைத்தலைவராகவும் இருக்கிறார். நடப்பு கூட்டத்தொடரில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளுக்கும், தன்கருக்கும் இடையே தினமும் மோதல் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக அதானி முறைகேட்டை அவையில் எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கும் அவர், அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்த குற்றச்சாட்டை எழுப்ப ஆளுங்கட்சியினருக்கு அனுமதி அளித்தார். இது எதிர்க்கட்சிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மாநிலங்களவை தலைவர் ஆளுங்கட்சியின் செய்தி தொடர்பாளர் போல செயல்படுவதாகவும், ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அவருக்கு எதிராக கடந்த 10-ந்தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதன் மூலம் மாநிலங்களவை வரலாற்றில் முதல் முறையாக அவைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீதான முடிவு அறிவிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், இன்று அந்த தீர்மானம் தொடர்பான முடிவை மாநிலங்களவை பொதுச்செயலாளர், அவையில் தாக்கல் செய்தார். இதன்படி, ஜெகதீப் தன்கருக்கு எதிரான எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயன் சிங் நிராகரித்தார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், இது போன்ற தீர்மானத்தை தாக்கல் செய்வதற்கு 14 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும், ஜெகதீப் தன்கரின் பெயரில் எழுத்துப்பிழை இருப்பதாகவும் காரணங்கள் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்