இமயமலையில் மலையேற்றம்: மோசமான வானிலையால் 9 பேர் பலி
கர்நாடகத்தை சோ்ந்த 18 பேர் இமயமலையில் மலையேற்றம் மேற்கொண்டனர்.;
உத்தரகாசி,
கர்நாடகத்தை சேர்ந்த 18 பேர் கடந்த மாதம்(மே) 29-ந் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இமயமலைக்கு மலையேற்றத்திற்கு சென்றனர். 4 ஆயிரத்து 400 மீட்டர் உயரத்தில் உள்ள சகஸ்டிராடல் ஆல்பைன் ஏரியை பார்க்க சென்றனர். அவா்களுடன் மராட்டியத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் மலையேற்ற நிறுவன ஊழியர்கள் 3 பேரும் சென்றனர். ஆகமொத்தம் 22 பேர் குழு மலையேற்றம் சென்றனர்.
இமாலயன் வியூ டிரக்கிங் என்ற மலையேற்ற நிறுவனம் தான் அவர்களை அனுப்பி வைத்தது. உத்தரகாசியில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த மலையேற்ற நிகழ்வு இடம் பெற்றது. இந்த மலையேற்ற குழுவினர் 7-ந் தேதி (நாளை) உத்தரகாசியில் உள்ள தங்களின் இடத்திற்கு திரும்ப இருந்தனர். மலையேற்றம் சென்றுவிட்டு உத்தரகாசிக்கு திரும்பும் வழியில் மோசமான வானிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் தடம் மாறினர். இந்த மோசமான வானிலை காரணமாக கர்நாடகத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து கர்நாடக வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
கர்நாடகத்தை சோ்ந்த 18 பேர் இமயமலையில் மலையேற்றம் மேற்கொண்டனர். அவர்களுக்கு உதவியாக மேலும் 4 பேர் உடன் சென்றனர். இதில் மோசமான வானிலை காரணமாக 9 பேர் உயிரிழந்தனர். அங்கு மலைப்பகுதியில் வழிதெரியாமல் பரிதவித்த 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் டேராடூன் நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரிடம் நான் பேசினேன். அப்போது அவர்கள் மலையேற்றம் சென்று இலக்கை அடைந்துவிட்டு முகாமிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது பகல் 2 மணியளவில் வானிலை மோசமடைந்து உள்ளது. பலத்த காற்றும், பனிப்பொழிவும் ஏற்பட்டுள்ளது. அதில் அவர்கள் சிக்கிக் கொண்டனர் என்பது தெரியவந்தது. உத்தரகாண்ட் அரசின் உதவியுடன் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய உள்துறையின் மீட்பு படையினர் அவர்களை மீட்டுள்ளனர். இறந்தவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.