அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை: வலது காலுக்கு பதில் இடது காலில் அறுவை சிகிச்சை

தவறுதலாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் அந்த நோயாளியால் நடக்க முடியாமல் போனது.

Update: 2024-06-20 19:44 GMT

கோப்புப்படம்

பானிபட்,

அரியானா மாநிலம் பானிபட் நகரில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. அண்மையில் வலது முழங்காலில் காயம் ஏற்பட்ட நோயாளி ஒருவர் இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கு அந்த நோயாளி சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து அறுவை சிகிச்சை நடந்தது.

ஆனால் வலது முழங்காலுக்கு பதிலாக இடது முழங்காலில் டாக்டர்கள் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்துவிட்டனர். இதை அறிந்த நோயாளியின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, டாக்டர்கள் அந்த நோயாளிக்கு வலது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்தனர். எனினும் தவறுதலாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் அந்த நோயாளியால் நடக்க முடியாமல் போனது.

இதனிடையே அந்த நோயாளியிடம் பிரதமரின் மருத்துவ காப்பீட்டு இருந்தபோதும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறுவை சிகிச்சைக்காக அவரிடம் இருந்து பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி அரியானா அரசு மற்றும் மாநில காவல்துறை தலைவருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்