கும்பமேளா உயிரிழப்புகளுக்கு பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்க வேண்டும்: காங்கிரஸ்
கும்பமேளாவில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.;

லக்னோ,
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இங்கு மவுனி அமாவாசை தினத்தில் நடைபெறும் 'அமிர்த ஸ்நானம்' நிகழ்ச்சிக்கு 10 கோடி பக்தர்கள் வருவார்கள் என முன்பே கூறப்பட்டது. அதன்படியே நேற்று அதிகாலை 1 மணி முதல் பிரயாக் ராஜில் கோடிக்கணக்கான பக்தர்கள் திரண்டு புனித நீராட சென்றனர். சங்கமம் பகுதியில் புனித நீராட பல படித்துறைகள் அமைக்கப்பட்டிருந்தாலும், சங்கமம் முனைப்பகுதி இடத்தில் புனித நீராட பக்தர்கள் ஆர்வம் காட்டினர்.இதனால் அங்கு பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் உ.பி. அரசின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், கும்பமேளா கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிரதமர் மோடியும், யோகி ஆதித்யநாத்தும் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக மராட்டிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் நானா படோல் கூறியதாவது: கும்பமேளா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆதித்யநாத் படங்களை மட்டும்தான் பார்க்க முடிகிறது. கும்பமேளாவில் ஏற்பட்ட துயரத்திற்கு அவர்கள் இருவரும்தான் பொறுப்பேற்று பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். கும்பமேளாவில் உயிரிழப்பு எண்ணிக்கை உண்மையில் அறிவித்ததை விட கூடுதலாக இருக்கும்" இவ்வாறு அவர் கூறினார்.