மராட்டிய சட்டசபை தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேசியவாத காங்கிரஸ்

பாராமதி சட்டசபை தொகுதியில் அஜித் பவார் மீண்டும் போட்டியிடுகிறார்.

Update: 2024-10-23 09:55 GMT

மும்பை,

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 20-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலில் ஆளும், எதிர்க்கட்சி கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கூட்டணியில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும், எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

இந்தநிலையில் சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 57 பேர் மட்டும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் வருகிற 29-ம் தேதி ஆகும்.

பாஜக, சிவசேனா கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில்,  38 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. பவார் குடும்பத்தின் கோட்டையான பாராமதி சட்டசபை தொகுதியில் அஜித் பவார் மீண்டும் களம் காண்கிறார். அவரை எதிர்த்து அஜித்பவாரின் அண்ணன் மகன் யுகேந்திர பவார் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் மூத்த தலைவரான மறைந்த மாணிக்கராவ் கவித்தின் மகன் பாரத் கவித் நவாபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.மாநில சட்டசபையின் துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் திண்டோரி தொகுதியிலும், மந்திரி சாகன் புஜ்பால் யோலா தொகுதியிலும் களம் இறக்கப்பட்டுள்ளனர். பாஜகவில் இருந்து விலகி தேசியவாத கட்சியில் சேர்ந்த முன்னாள் மந்திரி ராஜ்குமாருக்கு பட்லோலே அர்ஜுனி மோர்கான் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த பட்டியலில் தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான நவாப் மாலிக் பெயர் இடம்பெறவில்லை. நவாப் மாலிக், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளி என்பதால் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பே தரக் கூடாது என வலியுறுத்தி வருகிறது பாஜக. தற்போது வெளியான முதல் பட்டியலில் நவாப் மாலிக் பெயர் இடம் பெறவில்லை. 2-வது கட்ட பட்டியலில் நவாப் மாலிக் பெயர் இடம் பெறலாம் எனவும் கூறப்படுகிறது.  பாஜக 156 தொகுதிகளிலும் ஷிண்டே சிவசேனா கட்சி 78 தொகுதிகளிலும் அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் போட்டியிடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்