மகா கும்பமேளா; உண்மையான பக்தர்கள் கவர்ச்சியான ஏற்பாடுகளை விரும்புவதில்லை - ஆன்மீக குரு கருத்து
உண்மையான பக்தர்கள் கவர்ச்சியான ஏற்பாடுகளை விரும்புவதில்லை என்று ஆன்மீக குரு கருத்து தெரிவித்துள்ளார்.;
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த 13-ந்தேதி தொடங்கிய இந்த மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வு, வரும் 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்திற்கு வருகை தந்து புனித நீராடி வருகின்றனர்.
இதனிடையே, சமீபத்தில் கும்பமேளா நடைபெறும் இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் படுகாயமடைந்ததாகவும் உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு, கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளை சரிவர செய்யாததால் இந்த சம்பவம் அரங்கேறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், மகா கும்பமேளாவிற்கு வரும் உண்மையான பக்தர்கள் கவர்ச்சியான ஏற்பாடுகளை விரும்புவதில்லை என்று ஆன்மீக குருவும், அகில இந்திய உதாசின் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவருமான மஹந்த் தர்மேந்திரா தாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "மகா கும்பமேளா என்பது கவர்ச்சி மற்றும் ஐந்து நட்சத்திர கலாசாரத்தின் மையம் அல்ல. அது சாதுக்கள், பக்தர்கள் மற்றும் சனாதன நம்பிக்கையின் மையமாகும்" என்று தெரிவித்தார்.
மகா கும்பமேளா தொடங்கியதில் இருந்தே நடிகைகள், ஊடக பிரபலங்கள், மாடல்கள் உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வைரலாகி வருகின்றனர். குறிப்பாக கும்பமேளாவில் பாசி மாலை விற்பனை செய்த பெண் மோனா லிசா, முன்னாள் மாடல் அழகி ஹர்ஷா ரிச்சாரியா, முன்னாள் ஐ.ஐ.டி. மாணவர் அபய் சிங், நடிகை மம்தா குல்கர்னி உள்ளிட்ட பலர் ஊடகங்களில் வைரலாக வலம் வந்தனர்.
இது குறித்து பேசிய ஆன்மீக குரும் மஹந்த் தர்மேந்திரா தாஸ், "ஊடகங்கள் சாதுக்களுக்கு உதவி செய்வதற்கு பதிலாக இதுபோன்ற நபர்களை பிரபலப்படுத்துகிறார்கள். ஊடக நிறுவனங்கள் ஏன் இதைச் செய்கின்றன? இதைப் பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும்.
திரிவேணி சங்மகத்திற்கு வரும் பக்தர்கள் பலர் திறந்த வெளியில் படுத்து உறங்கி, கங்கையில் புனித நீராடிவிட்டு செல்கின்றனர். உண்மையான பக்தர்கள் கவர்ச்சியான ஏற்பாடுகளையோ, பிரம்மாண்டமான கூடாரங்களையோ விரும்புவதில்லை. அவர்களிடம் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
உத்தரப்பிரதேச முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் கடுமையாக உழைத்து, அடிக்கடி மகா கும்பமேளாவிற்கு வருகை தந்து, ஏற்பாடுகளை நன்றாக கண்காணித்தார். ஆனால் அதிகாரிகள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சிறப்பு வசதிகளை வழங்குவதில் அதிக ஆர்வம் காட்டினர். அவர்கள் யோகி ஆதித்யநாத்தின் முயற்சிகளை நாசமாக்கினர்" என்று தெரிவித்துள்ளார்.