பெண் டாக்டர் கொலை வழக்கு: கைதான குற்றவாளியின் பகீர் பின்னணி
சஞ்சய் ராயிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில், பல இயற்கைக்கு மாறான பாலியல் உறவு சார்ந்த ஏராளமான வீடியோக்கள் இருந்தது தெரியவந்துள்ளது.;
கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்துவந்த பெண் பயிற்சி டாக்டர், கல்லூரி கருத்தரங்கு அறையில் உயிரிழந்து கிடந்தார். அரைநிர்வாண கோலத்தில் கடந்த 9ம் தேதி அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் , அதற்கு முந்தைய நாள் (ஆக.8) இரவு பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். குற்றவாளி சஞ்சய் ராய் குறித்து புதிய தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சஞ்சய் ராய்க்கு பல ஆண்டுகளாக மூத்த காவல் அதிகாரிகளுடன் நெருங்கிய நட்பு வட்டாரம் இருந்துள்ளது. இதன் காரணமாகவே, அவருக்கு கொல்கத்தாவில் உள்ள காவல் நிலையத்தில் தன்னார்வலராக பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. 2019 ம் ஆண்டு தன்னார்வலராக பணிக்கு சேர்ந்த 33 வயதான சஞ்சய் ராய். நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரது முதல் மனைவி பெஹாலா, இரண்டாவது பார்க் சர்க்கஸ், மூன்றாவது பாரக்பூரிலிருந்து, மற்றும் நான்காவதாக பெட்ரோல் பங்கில் வேலை செய்த பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்டார். இவர் அலிபூரை சேர்ந்தவர் ஆவார்.
திருமணம் செய்து கொண்ட சில நாட்களிடையே சஞ்சய் ராயின் விஸ்வரூபம் அப்பெண்ணுக்கு தெரியவந்தது. உடல்ரீதியாக துன்புறுத்தல் செய்யவே, காவல்நிலையத்தில், இவர் மீது குடும்ப வன்முறைத்தொடர்பாக அப்பெண் புகார் அளித்துள்ளார்.
இவர், தனது மனைவிகளையே உடல் ரீதியாக துன்புறுத்தல் செய்துள்ளதாகவும், பல கொடுமைகளை செய்துள்ளதாகவும் அவரின் வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுகள்தான் அதிகம் இருக்கும் என அவர் வசிக்கும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே அவரை விட்டு மனைவிகள் பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயின் செல்போனில் இயற்கைக்கு மாறான பாலியல் உறவு சார்ந்த ஏராளமான வீடியோக்கள் இருந்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுடன் இவருக்கு இருந்த நெருக்கம் அனைத்து துறைகளிலும் இவர் தவறுகள் செய்ய தடையின்றி அணுக வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இவர் தவறுகள் செய்தாலும் அதை தட்டிக்கேட்க யாரும் வர மாட்டார்கள் என்று தொடர்ந்து அவருக்கு தவறை தூண்ட செய்துள்ளது.
இந்நிலையில், சஞ்சய் ராய் மீது பிஎன்எஸ் பிரிவு 64 (கற்பழிப்பு) மற்றும் 103 (கொலை) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எல்லா குற்றங்களையும் செய்த பின் எந்த பதற்றமும் இல்லாமல், தப்பியோடாமல் அருகில் உள்ள காவல்பூத்திற்குச் சென்று சஞ்சய் ராய் நன்றாக தூங்கிகொண்டிருந்தாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.