பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியை கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேரில் சந்தித்து பேசினார்.;

Update:2024-11-29 15:49 IST

புதுடெல்லி,

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிரதமர் மோடியை கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார், எரிசக்தி துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ், மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மந்திரி பைரதி சுரேஷ் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். அப்போது விவசாயம், நீர்வளம் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பான கோரிக்கைகளை பிரதமரிடம் சித்தராமையா முன்வைத்தார்.

குறிப்பாக கர்நாடக மாநிலத்திற்கு 2023-24ல் ரூ.5,600 கோடியாக இருந்த குறுகிய கால விவசாயக் கடன் வரம்பை 'நபார்டு' வங்கி 2024-25ல் ரூ.2,340 கோடியாக குறைத்துள்ளதாகவும், இதனை உயர்த்தி வழங்குவதற்கு நிதித்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஜல் சக்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் இரண்டு முக்கியமான நீர் திட்டங்களான மேகதாது மற்றும் கலசபந்தூரி திட்டம் ஆகியவற்றை விரைவுபடுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்தராமையா கோரிக்கை விடுத்தார்.

மேலும் கர்நாடக மாநிலத்தில், வளர்ந்து வரும் 13 மாநகராட்சிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.10,000 கோடியும், மத்திய கர்நாடகாவின் வறட்சியால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு நீர்ப்பாசனத்தை உறுதி செய்யும் மேல் பத்ரா திட்டத்திற்கு ரூ.5,300 கோடியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் சித்தராமையா வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற பிரியங்கா காந்தியை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்