ஜல் ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிப்பு: பட்ஜெட்டில் அறிவிப்பு
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 15 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.;

புதுடெல்லி:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவ்வகையில், அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதை நோக்கமாக கொண்ட ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், இந்தியாவின் கிராமப்புற மக்கள் தொகையில் 80 சதவீத மக்கள் பயன்பெறும் வகையில் 15 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், 100 சதவீத இலக்கை அடைவதற்காக இந்த திட்டத்தை 2028 வரை நீட்டிப்பதாகவும் நிதி மந்திரி அறிவித்தார். இதற்கான மொத்த செலவினமும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் தனித்தனி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றும் அவர் கூறினார்.