இந்தியர்களுக்கு அவமதிப்பா..? நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறார் ஜெய்சங்கர்
அமெரிக்காவில் இந்தியர்கள் அவமதிக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விளக்கம் அளிக்கிறார்.;

கோப்புப்படம்
புதுடெல்லி,
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திருப்பி அனுப்பும் பணிகள் தொடங்கியதாகவும், முதல்கட்டமாக நேற்று முன்தினம் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து 205 இந்தியர்களுடன் 'சி-17' ரக ராணுவ விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் இந்தியர்களுடன் புறப்பட்ட அமெரிக்க ராணுவத்தின் 'சி-17' ரக விமானம் நேற்று பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இதையொட்டி விமான நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனிடையே 205 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், அமிர்தசரஸ் வந்தடைந்த அமெரிக்க ராணுவ விமானத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 104 இந்தியர்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் கைவிலங்கு போடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.
இந்த சூழலில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாக கூறப்படும் இந்தியர்களை நாடு கடத்துவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற மக்களவையில் கோரிக்கை விடுத்தனர். மேலும் அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களுக்கு கை விலங்கு போடப்பட்டதாக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இந்தியர்கள் நாடுகடத்தல் முறை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரியதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்கள் "மனிதாபிமானமற்ற முறையில்" நாடு கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக எழுந்த கொந்தளிப்புக்கு மத்தியில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இந்த விவகாரம் குறித்து இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.