விளைச்சல் அதிகரிப்பு: வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியை ரத்து செய்த மத்திய அரசு
வெங்காய ஏற்றுமதி மீதான 20 சதவீத வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.;

கோப்புப்படம்
புதுடெல்லி,
வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை 40 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு குறைத்தது. அரசின் இந்த முடிவால் வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைத்ததுடன் வெங்காய ஏற்றுமதியும் அதிகரித்தது.
இந்தநிலையில் ரபி பயிர் வரத்து அதிகரித்துள்ளதால், பல மாநிலங்களில் வெங்காயம் விலை சரிந்துள்ளது. எனவே விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் வெங்காயத்தின் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை திரும்பப்பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன்படி வெங்காய விலை தேசிய சராசரியில் 39 சதவீதமும், சில்லறை விலையில் 10 சதவீதமும் குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், ஏற்றுமதி வரி ரத்து அறிவிப்பு வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை வருவாய்த்துறை வெளியிட்டுள்ளது.