நட்டா, அமித்ஷா ஹெலிகாப்டர்களிலும் பரிசோதனை: உத்தவ் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

2024 மக்களவை தேர்தலின்போது, பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய மந்திரி அமித்ஷாவின் ஹெலிகாப்டர்கள் அமலாக்க அதிகாரிகளால் பரிசோதனை செய்யப்பட்டன.

Update: 2024-11-12 15:32 GMT

புதுடெல்லி,

மராட்டிய சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக யவத்மாலுக்கு சிவசேனா (உத்தவ் பால் தாக்கரே) தலைவர் உத்தவ் தாக்கரே புறப்பட்டார். அவர், யவத்மால் மாவட்டத்தில் உள்ள வானி ஹெலிபேடில் புறப்பட தயாரானபோது, தேர்தல் அதிகாரிகள் அவருடைய பைகளை சோதனை செய்தனர் என கூறினார். அதற்கான வீடியோவையும் நேற்று வெளியிட்டார்.

இதுபோன்ற பரிசோதனையை தேர்தல் அதிகாரிகள் பிரதமரிடமும் மேற்கொள்கின்றனரா? என கேள்வி எழுப்பினார். இந்நிலையில், தேர்தல் ஆணையம் வட்டாரங்கள் வெளியிட்ட தகவலில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோரின் ஹெலிகாப்டர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன என தெரிவித்துள்ளது.

2024 மக்களவை தேர்தலின்போது, இதுபோன்ற விவகாரம் பீகாரில் எழுந்தது. அப்போது, அமலாக்க அதிகாரிகளால், பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவின் ஹெலிகாப்டர் பாகல்பூரில் ஏப்ரல் 24-ந்தேதியும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் ஹெலிகாப்டர் கதிஹாரில் ஏப்ரல் 21-ந்தேதியும் பரிசோதனை செய்யப்பட்டன என தெரிவித்தது.

தேர்தல் நடைமுறையில் நேர்மை மற்றும் வெளிப்படை தன்மையை நிலைநிறுத்தவும், தேவையற்ற ஆதிக்கம் செலுத்துவது அல்லது தவறான நோக்கத்திற்காக அதிகார பயன்பாட்டை மேற்கொள்வது ஆகியவற்றை தடுக்கும் நோக்கில் சில நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

இதன்படி, அனைத்து தலைவர்களின் ஹெலிகாப்டர்களையும் பரிசோதனை செய்யும்படி, அமலாக்க துறைக்கு தேர்தல் ஆணையம் வலியுறுத்தி இருந்தது. சமீபத்தில் சட்டசபை தேர்தலை தலைமை தேர்தல் ஆணையாளர் ராஜீவ் குமார் அறிவித்தபோதும், இதனை வலியுறுத்தினார். இதனை தொடர்ந்தே, தலைவர்களின் ஹெலிகாப்டர்கள் அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்