"பண பலம், மதுவின் மீது மட்டுமே கவனம் செலுத்தினார் கெஜ்ரிவால் " - அன்னா ஹசாரே
தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல் மந்திரியுமான கெஜ்ரிவால் மற்றும் தற்போதைய முதல் மந்திரி ஆதிஷி , ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களான மனிஷி சிசோடியா, சோம்நாத் பார்தி ஆகியோரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
பா.ஜ.க. தற்போதைய நிலவரப்படி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால், டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2013, 2015 மற்றும் 2020 தேர்தல்களில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்நிலையில், பண பலம், மதுவின் மீது மட்டுமே அரவிந்த் கெஜ்ரிவால் கவனம் செலுத்தியதாக காந்தியவாதி அன்னா ஹசாரே விமர்சனம் செய்துள்ளார். டெல்லி தேர்தல் முடிவுகள் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஒரு வேட்பாளரின் நடத்தை, எண்ணங்கள் சுத்தமானதாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறி வந்திருக்கிறேன். வாழ்க்கையானது யாரும் குறை சொல்ல முடியாதபடி இருக்க வேண்டும். தியாகம் இருக்க வேண்டும். இந்த தகுதிகள் தான், ஒரு வாக்காளர் நம் மீது நம்பிக்கை வைப்பதற்கு அடிப்படையானவை.
இதை நான் கெஜ்ரிவாலிடம் கூறி இருக்கிறேன். ஆனால் அவர் அதை கேட்கவில்லை. கடைசியில், மதுவில் தான் அவர் கவனம் செலுத்தினார். ஏன் இந்த பிரச்னை எழுகிறது. அவர் பணத்தின் செல்வாக்குக்கு ஆட்பட்டு விட்டார்" என்று அன்னா ஹசாரே கூறினார்.
முன்னதாக அன்னா ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு இயக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.