குஜராத்: கனமழையால் சாலையில் தோன்றிய பெரிய பள்ளம்; காங்கிரஸ் சாடல்

குஜராத்தில் கனமழை தொடர்ச்சியாக, மரம் ஒன்று வேரோடு சாய்ந்து கார் ஒன்றின் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

Update: 2024-06-30 20:30 GMT

ஆமதாபாத்,

குஜராத்தில் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் என அறிவிப்பும் வெளியாகி உள்ளது. கனமழையால், சூரத், பூஜ், வாபி, பருச் மற்றும் ஆமதாபாத் ஆகிய நகரங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

இதனால், ஆமதாபாத்தின் ஷெலா பகுதியில் சாலையில் திடீரென ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. சாலையின் நடுவே தோன்றிய இந்த பள்ளத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோன்று மற்றொரு சம்பவத்தில், மரம் ஒன்று வேரோடு சாய்ந்து கார் ஒன்றின் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.

வாகனங்கள் சாலையில் செல்ல முடியாத அளவுக்கு நீர் நிரம்பி காணப்பட்டது. பல இடங்களில் வெள்ள நீர் சாக்கடை போன்று தேங்கி காணப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

குஜராத்தில் சாலையில் பள்ளம் ஏற்பட்டதும், அதனை சரி செய்ய மணல் கொண்டு வந்து கொட்டப்பட்டது. எனினும், மழை நீர் தொடர்ந்து வடிந்து ஓடி அதில் நிரம்பியபடி காணப்பட்டது. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்து வைரலானது. உடனடியாக கேரள காங்கிரஸ் பிரிவு, இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆளும் பா.ஜ.க.வை சீண்டியுள்ளது.

இதுபற்றிய வீடியோவை பகிர்ந்து, ஆமதாபாத் சீர்மிகு நகரில் மழைநீர் சேகரிப்பு வசதி சமீபத்தில் நிலத்திற்கடியில் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், ஒரு துளி நீர் கூட அரபி கடலில் சென்று கலக்காது என உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்