காந்தி நினைவு தினம்: பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி
டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடியும், ஜனாதிபதி திரவுபதி முர்முவும் அஞ்சலி செலுத்தினர்.;

புதுடெல்லி,
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது திரு உருவ சிலைக்கு காந்தியவாதிகள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காந்தியின் நினைவு தினத்தையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, காந்தியின் நினைவு தினம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, "மகாத்மா காந்தியின் நினைவு தினமான இன்று அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கொள்கைகள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க நம்மை தூண்டுகின்றன. நமது தேசத்திற்காக தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். மேலும், அவர்களின் சேவை மற்றும் தியாகங்களை நினைவுகூருகிறேன்." என பதிவிட்டுள்ளார்.
(இந்திய விடுதலை இயக்கத்தின் மிக முக்கியமான முகமாக திகழ்ந்த காந்தி, 1948 ஆம் ஆண்டு இந்த நாளில் நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்டார்.)