அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்து கிடந்த பாம்பு: பெற்றோர் புகார்

அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு வழங்கப்பட்ட மதிய உணவு பொட்டலத்தில் உயிரிழந்த பாம்பு இருந்ததைக்கண்டு. பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2024-07-04 10:39 GMT

மும்பை,

மராட்டியத்தில் 6 மாதம் முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அங்கன்வாடிகள் மூலம் மதிய உணவு மற்றும் கொண்டை கடலை, பச்சை பயறு, கோதுமை போன்ற உணவுப்பொருள்கள் வழங்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சாங்கிலி மாவட்டம் பாலஸ் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் இருந்து அந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகளின் வீடுகளுக்கு உணவு பொருள் பாக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது, ஒரு குழந்தைக்கு வழங்கப்பட்ட உணவுப்பொருள் பாக்கெட்டை திறந்தபோது, அதில் சிறிய அளவிலான பாம்பு செத்து கிடந்ததாக தெரிகிறது. இதைப்பார்த்து குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உணவுப்பொருளில் பாம்பு கிடப்பதை செல்போனில் படம் பிடித்தனர். மேலும் அது குறித்து அங்கன்வாடி பணியாளருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கன்வாடி பணியாளர் உணவுப்பொருளில் பாம்பு இருக்கும் படத்தை மாவட்ட அங்கன்வாடி பணியாளர்கள் வாட்ஸ்-அப் குழுவில் பகிர்ந்தார். இதையடுத்து இந்த சம்பவம் அம்பலமானது. இந்த பிரச்சினை குறித்து கடந்த 2-ந்தேதி நடந்த சாங்கிலி ஜில்லா பரிஷத் துணை தலைமை நிர்வாக அதிகாரி கூட்டத்தில் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கன்வாடி மையங்களுக்கு வினியோகம் செய்யப்பட்ட உணவுப்பொருள் இருந்த குடோன் உடனடியாக 'சீல்' வைக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரி சந்தீப் யாதவ் கூறுகையில், "அங்கன்வாடிகளுக்கு உணவுப்பொருள் பாக்கெட்டுகளை ஒப்பந்ததாரர் அனுப்பி உள்ளார். அங்கன்வாடி பணியாளர்கள் உணவுப்பொருள் வந்த 2-3 நாளில் பயனாளர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள். உணவுப்பொருள் பாக்கெட்டில் பாம்பு செத்து கிடந்ததை அங்கன்வாடி பணியாளரோ, மாவட்ட நிர்வாக அதிகாரிகளோ யாரும் பார்க்கவில்லை. பெற்றோர் மட்டுமே பார்த்து உள்ளனர். அவர்கள் எடுத்த புகைப்படம் மற்றும் உணவுப்பொருள் மாதிரியை வைத்து விசாரணை நடத்த உள்ளோம். பாம்பு கிடந்ததாக கூறப்படும் உணவுப்பொருளை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையினர் ஆய்வுக்கு எடுத்துச்சென்று உள்ளனர்" என்றார்.

மும்பையில் சமீபத்தில் டாக்டர் வாங்கிய ஐஸ்கிரீமில் மனித விரல் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், மதிய உணவுத்திட்டத்தில் வழங்கப்பட்ட உணவுப்பொருளில் பாம்பு செத்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்