மாமியாரை 95 முறை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகளுக்கு மரண தண்டனை

மத்திய பிரதேசத்தில் மாமியாரை 95 முறை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-12 10:48 GMT

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அத்ரைலா என்ற கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான சரோஜ் கோல் என்ற பெண்ணை, அவரது 24 வயது மருமகள் காஞ்சன் கோல், கத்தியால் குத்தி கொலை செய்தார். இது தொடர்பாக காஞ்சன் கோலை கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 12-ந்தேதி போலீசார் கைது செய்தனர். அவர் தனது மாமியாரை சுமார் 95 முறை கத்தியால் குத்தியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நடந்தபோது மாமியாரும், மருமகளும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மாமியார் சரோஜை மருமகள் காஞ்சன் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து காஞ்சனின் கணவர் போலீசாரிடம் தகவல் தெரிவித்ததோடு, தனது தாய் சரோஜை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து போலீசார் காஞ்சனை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ரேவா மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, காஞ்சனுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில், உயிரிழந்த சரோஜ் கோலின் கணவர் வால்மீக் கோலின் பெயரும் முதலில் சேர்க்கப்பட்டு, பின்னர் ஆதாரங்கள் இல்லாததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்