அதானி மீதான குற்றச்சாட்டு: நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை- காங்கிரஸ்
அதானி மீதான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
புதுடெல்லி,
சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ரூ. 2,100 கோடி லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு அதானி கொடுத்ததாகவும், அதனை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாகவும் நியூயார்க் கோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:- கடந்த ஜனவரி 2023 முதல் அதானியின் பல்வேறு முறைகேடுகளை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகின்றது.மோடி மற்றும் அவருக்கு நெருக்கமான தொழிலதிபரை இடையேயான தொடர்பு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால், ஒரு கேள்விக்கும் பதிலளிக்கப்படவில்லை.
இதனிடையே, 2020 முதல் 2024 இடையிலான காலகட்டத்தில் அரசு அதிகாரிகளுக்கு ரூ. 2,100 கோடி லஞ்சம் கொடுத்து ஒப்பந்தங்களை அதானியும் சாகர் அதானியும் பெற்றதாக அமெரிக்காவில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. அதானியின் முறைகேடுகளை விசாரிக்க வெளிநாட்டு அரசு முன்வந்துள்ளது, இந்திய நிறுவனங்கள் பாஜக அரசால் கைப்பற்றப்பட்டிருப்பதை காட்டுகிறது. அதானியின் முறைகேடு குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும்" என்றார்.