ஓய்வுக்கு பின் தலைமை தேர்தல் ஆணையருக்கு ஒரு வேலை வேண்டும்: கெஜ்ரிவால் தாக்கு

ராஜீவ் குமார் அரசியல் செய்ய விரும்பினால், அவர் டெல்லியில் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.;

Update:2025-01-30 16:23 IST
ஓய்வுக்கு பின் தலைமை தேர்தல் ஆணையருக்கு ஒரு வேலை வேண்டும்:  கெஜ்ரிவால் தாக்கு

புதுடெல்லி,

அரியானாவில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்து வரும் சூழலில், அரியானாவில் இருந்து யமுனை ஆற்றுக்கு வரும் நீரில் விஷம் கலக்கப்பட்டு உள்ளது என ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் சமீபத்தில் குற்றச்சாட்டுகளை கூறினார். டெல்லி சட்டசபைக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழலில், அவருடைய இந்த குற்றச்சாட்டு டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கெஜ்ரிவால் கூறும்போது, யமுனை ஆற்றில் விஷம் கலக்கப்பட்டு மக்களை சென்றடைவதற்கு முன்பு டெல்லி நீர் வாரியத்தின் என்ஜினீயர்கள் சரியான தருணத்தில் கண்டறிந்து, தடுத்தனர். இல்லையெனில் இனப்படுகொலை எனும் அளவுக்கு அதிக அளவிலான மக்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள். நீருடன் விஷம் கலப்பதற்கு முன்பே அது தடுக்கப்பட்டது என கூறினார்.

இந்த விவகாரம் சர்ச்சையானதும், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தன. இதனை தொடர்ந்து, டெல்லியில் யமுனை ஆற்றில் விஷம் கலப்பு பற்றி பேசியதற்கு உரிய பதிலளிக்கும்படி கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், கெஜ்ரிவால் இன்று பேசும்போது, நான் தேர்தல் ஆணையத்திடம் மரியாதையுடன் ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறேன். நகரில் போர்வைகள், பணம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றை அவர்களால் (தேர்தல் ஆணையம்) பார்க்க முடியவில்லை.

தேர்தல் ஆணையம் அரசியல் செய்து வருகிறது. ஓய்வுக்கு பின் தேர்தல் ஆணைய தலைவர் ராஜீவ் குமாருக்கு ஒரு வேலை வேண்டும் என விரும்புகிறார். ராஜீவ் குமாரிடம் நான் கூற விரும்புவது என்னவென்றால், வரலாறு உங்களை மன்னிக்காது. தேர்தல் ஆணையத்தில் அவர் குழப்பம் ஏற்படுத்தி விட்டார் என கூறியுள்ளார்.

தொடர்ந்து கெஜ்ரிவால் கூறும்போது, ராஜீவ் குமார் அரசியல் செய்ய விரும்பினால், அவர் டெல்லியில் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்