வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக பட்ஜெட் அர்ப்பணிக்கப்படுகிறது: மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
வளர்ச்சியை ஊக்குவிக்கும் நம்முடைய முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்த பட்ஜெட் இருக்கும் என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.;

புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில், நாடாளுமன்றத்தில், மத்திய பட்ஜெட் 2025-ஐ தாக்கல் செய்வதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்பின்னர் பேசிய பிரதமர் மோடி, பொதுமக்களை மனதில் கொண்டு பட்ஜெட் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டானது ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் நோக்கங்களை நிறைவேற்றும் நோக்கம் கொண்டது என்றார்.
இதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அவையில் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசினார்.
அவர் பேசும்போது, பிரதமர் மோடி தலைமையின் கீழ் நாம் ஒன்றிணைந்து, நாட்டின் ஆற்றலை திறக்கும் நோக்கத்துடன் செயல்படுவோம் என்றார்.
தொடர்ந்து அவர், நான் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மதிப்பிற்குரிய சபாநாயகர் முன்னிலையில் தாக்கல் செய்கிறேன். வளர்ச்சியை ஊக்குவிக்கும் நம்முடைய முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்த பட்ஜெட் இருக்கும் என்றார்.
வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நம்முடைய உன்னத நோக்கத்துடன் உந்தப்பட்டு, வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக இந்த பட்ஜெட் அர்ப்பணிக்கப்படுகிறது என் அதன் நோக்கம் பற்றி சுட்டி காட்டியுள்ளார்.
அனைத்து பெரிய பொருளாதாரங்களிலும் நம்முடைய பொருளாதாரம் தொடர்ந்து விரைவாக வளர்ந்து வரும் ஒன்றாக உள்ளது என அவர் கூறினார்.