மத்திய பட்ஜெட்: 6 துறைகளில் சீர்திருத்தங்கள் தொடங்கப்படும் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் ஆறு துறைகளில் சீர்திருத்தங்களை தொடங்கும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.;

புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில் 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
தொடர்ந்து எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிர்மலா சீதாராமன், "கடந்த 10 ஆண்டுகளில் அரசின் வளர்ச்சிப் பாதை மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன. வளர்ந்த இந்தியா பூஜ்ஜிய வறுமை, தரமான கல்வி, விரிவான சுகாதாரப் பராமரிப்பு உள்ளிட்டவற்றைக் கொண்டிருக்கும் .
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதே பட்ஜெட்டின் நோக்கம். 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் வரிவிதிப்பு, நகர்ப்புற மேம்பாடு, சுரங்கம், நிதித்துறை, மின்சாரம் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பு ஆகிய ஆறு துறைகளில் சீர்திருத்தங்களை தொடங்கும்" என்று கூறினார்.