பாலிவுட் நடிகை லைலா கான் கொலை வழக்கில் வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை

பாலிவுட் நடிகை லைலா கான் கொலை வழக்கில் அவரது வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-05-24 10:41 GMT

மும்பை,

கடந்த 2011-ம் ஆண்டு பாலிவுட் நடிகை லைலா கான், அவரது தாயார் மற்றும் உடன் பிறந்தவர்கள் என மொத்தம் 5 பேர் நாசிக் மாவட்டத்தில் உள்ள பங்களாவில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், லைலா கானின் வளர்ப்பு தந்தை பர்வேஸ் தக் என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பர்வேஸ் தக், நடிகை லைலா கானின் தாய் செலினாவின் 3-வது கணவர் ஆவார். இந்த கொலை நடந்து சில மாதங்களுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் போலீசாரால் பர்வேஸ் தக் கைது செய்யப்பட்டார். மேலும் நாசிக் மாவட்டத்தில் உள்ள பங்களாவில், அழுகிய நிலையில் லைலா கான் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக 40 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில், பர்வேஸ் தக் மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி சச்சின் பவார் கடந்த 9-ந்தேதி அறிவித்தார்.

நடிகை லைலா கானின் தாய் செலினாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பர்வேஸ் தக், முதலில் அவரை கொலை செய்ததாகவும், பின்னர் லைலா கான் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 4 பேரை கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, பர்வேஸ் தக்கிற்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்