வாக்குவாதம் முற்றியதில் பைக் ஓட்டுநரை காரின் முன்பக்கத்தில் வைத்து 2 கி.மீ. இழுத்து சென்ற கொடூரம்
மராட்டியத்தில் பைக் ஓட்டுநரை காரின் முன்பக்கத்தில் வைத்து 2 கி.மீ. இழுத்து சென்ற சம்பவத்தில் காரின் ஓட்டுநர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
புனே,
மராட்டியத்தின் புனே நகரில் பிம்ப்ரி சின்ச்வாத் பகுதியில் சென்று கொண்டிருந்த பைக் ஓட்டுநர் ஒருவருக்கும், கார் ஒன்றில் பயணித்த 3 பேருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில், ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த காரில் இருந்தவர்கள் பைக் ஓட்டுநரை காரின் முன்பக்கத்தில் வைத்து 2 கி.மீ. தொலைவுக்கு இழுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் காரின் ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேரை புனே நகர போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது புதிய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 103-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
குற்றவாளியின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது. அவர் மது குடித்திருக்கிறாரா? இல்லையா? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என போலீசார் தெரிவித்தனர். மராட்டியத்தில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த ஆகஸ்டில் விரைவாக சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பிம்ப்ரி சின்ச்வாத் பகுதியிலுள்ள சாலை தடுப்பானின் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில், 2 பேர் காயமடைந்தனர்.
மும்பையின் ஒர்லி பகுதியில், இந்த ஆண்டு தொடக்கத்தில், கணவருடன் பைக்கில் சென்ற பெண் ஒருவர் ஆடம்பர ரக கார் மோதியதில் பலியானார். கணவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
புனே நகரின் கல்யாணி நகரில், கடந்த மே 19-ந்தேதி சொகுசு கார் ஒன்றை ஓட்டிய 18 வயதுக்குட்பட்ட சிறுவன் குடிபோதையில் விபத்து ஏற்படுத்தியதில், ஐ.டி. நிறுவன பணியாளர்கள் 2 பேர் பலியானார்கள்.