பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் பிரச்சினைகள் என்னென்ன? - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு பேட்டி
அனைத்து பிரச்சினைகளையும் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து எழுப்ப முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி கூறினார்.;

புதுடெல்லி:
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் 36 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 52 தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்திற்கு பிறகு நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்துக் கட்சிகளையும் கேட்டுக்கொண்டார்.
'இன்றைய கூட்டம் சிறப்பானதாக அமைந்தது. அரசியல் கட்சித் தலைவர்கள் சில பிரச்சினைகளை எழுப்பி, அந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும்படி கோரினர். எந்தெந்த பிரச்சினைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும்' என்றும் அவர் கூறினார்.
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாகவும் அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும் என மந்திரி தெரிவித்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து பிரச்சினைகளையும் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து எழுப்ப முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி கூறினார்.
'மதம் சார்ந்த கூட்டங்கள் ஆளும் பா.ஜ.க.வுடன் தொடர்புடைய வி.ஐ.பி.க்களின் கூட்டமாக மாறுவது குறித்து காங்கிரஸ் பிரச்சினை எழுப்பும். அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் விவசாயிகளின் பரிதாப நிலை பற்றிய பிரச்சினைகளும் எழுப்பப்படும்' என்றும் திவாரி தெரிவித்தார்.