பக்தர்களின் கவனத்திற்கு... அயோத்தி ராமர் கோவில் நிர்வாகம் அவசர அறிக்கை

உத்தர பிரதேசத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் உள்ளூர் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.;

Update:2025-01-28 20:44 IST
பக்தர்களின் கவனத்திற்கு... அயோத்தி ராமர் கோவில் நிர்வாகம் அவசர அறிக்கை

அயோத்தி,

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரையிலான 45 நாட்கள் இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.

இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என்றும் இதனால், ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சங்கமம் பகுதியில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இதனால், நிறைய காவலர்கள் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். ஆளில்லா விமானங்கள் உதவியுடன் காவல் நிர்வாகம் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. நீருக்கடியிலும் ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பு பணியை செய்து வருகிறது. பக்தர்களின் வசதிக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்ராவின் பொது செயலாளர் சம்பத் ராய் பக்தர்களுக்கு இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், கோவிலுக்கு அருகே வசிக்கும் பக்தர்கள் அவர்களுடைய வருகையை ஒத்தி வைக்கும்படி கேட்டு கொள்கிறேன். இதனால், தொலைதூர பகுதிகளில் இருந்து வருபவர்கள் கோவிலை எளிதில் வந்தடைய முடியும் என கூறியுள்ளார்.

நாளை மவுனி அமாவாசை தினம் வருகிறது. இதற்கு வருகை தரும் பக்தர்கள் புனித நீராடலை முடித்து விட்டு, ராமர் கோவிலுக்கு செல்வதுண்டு. நாளை மவுனி அமாவாசையை முன்னிட்டு, 10 கோடி பக்தர்கள் புனித நீராட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவிலான கூட்ட நெரிசலை எதிர்கொள்ளும் வகையில் அயோத்தியில் போதிய இடவசதி இல்லை என ராய் கூறியுள்ளார்.

கடந்த 3 நாட்களாக அயோத்திக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த சூழலில், அந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு ஒரு நாளில் சாமி தரிசனத்திற்கான ஏற்பாடுகளை செய்வது என்பது கடினம். அது பக்தர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

இதனால், எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுப்பதற்காக, உள்ளூர் பக்தர்கள் 15 முதல் 20 நாட்கள் கழித்து தரிசனத்திற்கு வருகை தரும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இது அனைவருக்கும் சவுகரியம் ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்