பெங்களூருவில் விமான கண்காட்சி நாளை தொடக்கம்
தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விமான கண்காட்சி நடைபெற உள்ளது.;
பெங்களூரு,
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை என இதுவரை 14 தடவை இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு விமான கண்காட்சி நடந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு விமான கண்காட்சி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் நடைபெற இருக்கிறது. வருகிற 10-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி வரை 5 நாட்கள் இந்த விமான கண்காட்சி நடக்கிறது.
தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விமான கண்காட்சி நடைபெற உள்ளது. மேலும் விமான கண்காட்சி நடைபெறும் 5 நாட்களும் காலை ஒருமுறையும், மதியம் ஒருமுறையும் என 2 முறை விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும். இதற்கான ஏற்பாடுகளை இந்திய ராணுவ அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த விமான கண்காட்சியானது நாளை முதல் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு இன்று அதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே பலரும் இந்த நிகழ்ச்சியை காண வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.