அக்னிபான் ராக்கெட் திட்டம் 4-வது முறையாக ஒத்திவைப்பு

அக்னிபான் ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 4-வது முறையாக நேற்றும் விண்ணில் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.;

Update:2024-05-29 04:46 IST

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து 'அக்னிகுல் காஸ்மோஸ்' எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் தரமணியில் இயங்கி வருகிறது. ராக்கெட் வடிவமைப்பை அடிப்படையாக கொண்ட இந்த நிறுவனம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உதவியுடன் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆய்வு மையத்தில் தனியார் ஏவுதளத்தை அமைத்துள்ளது. தனியார் பயன்பாட்டுக்கு சிறிய ரக ராக்கெட்களை விண்ணில் செலுத்துவதற்காக அந்த ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 'அக்னிபான் சார்டெட்' எனும் சிறிய ராக்கெட்டை அந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது. இது சுமார் 300 கிலோ எடை கொண்ட விண்கலத்தை சுமந்து கொண்டு, பூமியில் இருந்து 700 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் திறன் கொண்டது. 2 நிலைகள் கொண்ட அக்னிபான் ராக்கெட் பகுதி கிரயோஜெனிக் எந்திரம் மூலம் இயங்கக்கூடியது.

இந்த ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த மார்ச் 22-ந் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. இறுதிகட்ட சோதனையின்போது தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் ராக்கெட் ஏவுதல் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர், பழுதுகளை கண்டறிந்து சரிசெய்யப்பட்டன.

தொடர்ந்து, 'அக்னிபான்' ராக்கெட் கடந்த மாதம் 6-ந் தேதி விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான இறுதிகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், கவுண்ட்டவுன் தொடங்குவதற்கு முன்பு, ராக்கெட்டில் மேலும் சில தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் ராக்கெட் ஏவுதல் திட்டம் 2-வது முறையாக தள்ளிவைக்கப்பட்டது.

4-வது முறையாக ஒத்திவைப்பு

தொழில்நுட்ப பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு 'அக்னிபான்' ராக்கெட் மீண்டும் கடந்த மாதம் 7-ந் தேதி விண்ணில் செலுத்த முயற்சிக்கப்பட்டது. அப்போதும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதனை சரி செய்து நேற்று காலை 7.30 மணிக்கு விண்ணில் ஏவ இறுதிகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதிலும் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 9.25 மணிக்கும் முயற்சிக்கப்பட்டு முடியாமல் போனது. தொடர்ந்து 4 முறை தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணில் ஏவப்படாததால், இனி இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் ஆய்வு செய்துவிட்டு அதற்கு பிறகு மற்றொரு தேதியில் விண்ணில் ஏவப்படும் என்று அக்னிகுல் ஆய்வாளர்கள் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்