கமலா ஹாரிஸ் வெற்றி பெற தெலுங்கானாவில் 41 நாள் ஹோமம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என நல்லா சுரேஷ் நம்பிக்கை வெளியிட்டு உள்ளார்.

Update: 2024-07-30 00:21 GMT

கம்மம்,

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இதேபோன்று, ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் முடிவுடன் 81 வயதுடைய பைடன் களம் இறங்கினார்.

ஆனால், வயது முதிர்வு, டிரம்புடனான விவாதத்தின்போது திணறல், உள்ளிட்ட சர்ச்சைகளால் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. கட்சியினரின் அதிருப்தி அதிகரித்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்த பைடன், அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார்.

தொடர்ந்து, கமலா ஹாரிசை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவித்து தன்னுடைய முழு ஆதரவையும் வெளிப்படுத்தினார். கமலா ஹாரிசும் தீவிர தேர்தல் பணியை தொடங்கி விட்டார். வேட்பாளர் அறிவிப்பு வெளியானதும், கட்சிக்குள் ஆதரவை திரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என்று சியாமளா கோபாலன் கல்வி அறக்கட்டளையின் நிறுவனரான அதன் தலைவர் நல்லா சுரேஷ் ரெட்டி 41 நாள் ஹோமம் நடத்த உள்ளார்.

இதற்கு முன்னர், அதிபர் வேட்பாளராக வரவேண்டும் என்று சமீபத்தில் 41 நாள் ஹோமம் நடத்தினார். கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விட்டார். இதனை தொடர்ந்து, அதிபராக அவர் வரவேண்டும் என ஆகஸ்டு இறுதியில், 41 நாள் ஹோமம் நடத்த திட்டமிட்டு உள்ளார்.

வருகிற செப்டம்பர் 10-ந்தேதி வாஷிங்டன் டி.சி.யில் இந்திய வம்சாவளியினர் கலந்து கொள்ளும் பெரிய அளவிலான கூட்டம் ஒன்றை அவர் நடத்த உள்ளார். இதில், இந்திய அமெரிக்கர்களிள் ஆதரவை அவர் கோருகிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என நல்லா சுரேஷ் நம்பிக்கை வெளியிட்டு உள்ளார்.

இந்த அறக்கட்டளை சார்பாக, தேவைப்படுபவர்களுக்கு, பல்வேறு நிகழ்ச்சிகள் வழியே கல்வி மற்றும் சுகாதாரம் சார்ந்த விசயங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நல்லா சுரேஷ் கூறும்போது, நாட்டிலேயே மிக பெரிய சர்வதேச பள்ளி ஒன்றை நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது. தெலுங்கானாவில் 150 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்துடன் இந்த பள்ளி கட்டப்படும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, தெலுங்கானா முழுவதும் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. நடப்பு ஆண்டு செப்டம்பரில் மேலும் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்