ஏரியில் மூழ்கி 3 பெண்கள் பரிதாப சாவு... துணி துவைக்க சென்றபோது சோகம்
துணி துவைக்க சென்றபோது ஏரியில் மூழ்கி 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.;

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரியை அடுத்த லட்சுமிசாகர் கிராமத்தை சேர்ந்தவர்கள் தீபா (வயது 28), திவ்யா (23), சந்தனா (19). இவர்கள் 3 பேரும் நேற்று அதே கிராமத்தில் உள்ள ஏரியில் துணி துவைப்பதற்காக சென்றிருந்தனர். துணி துவைத்து முடித்ததும் 3 பேரும் ஏரியில் இறங்கி குளித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 3 பேரும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது தண்ணீரில் மூழ்கி தத்தளித்த 3 பேரும், பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சென்னகிரி போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
பின்னர் போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சென்னகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.