வயநாட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 3 புலிகள்

வயநாட்டில் மர்மமான முறையில் 3 புலிகள் இறந்து கிடந்தன.;

Update:2025-02-07 08:30 IST

வயநாடு ,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே கூட்டமுண்டா எஸ்டேட் பகுதியில் நேற்று காலை வழக்கம் போல தொழிலாளர்கள் காபி பழங்கள் பறிக்க சென்றனர். அப்போது துர்நாற்றம் வீசியதை அடுத்து, அப்பகுதியில் தேடி பார்த்தனர். அங்கு ஆண் புலி ஒன்று இறந்து கிடந்தது. இதை கண்ட தொழிலாளர்கள் உடனே வயநாடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று புலியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.இதற்கிடையே மதியம் 2 மணியளவில் குறிச்சியாடு வனத்துறை எல்லைக்கு உட்பட்ட தாத்தூர் அருகே மயக்கொல்லி வனப்பகுதியில் 2 புலிகள் இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மேப்பாடி வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர்.அப்போது ஒரு ஆண் புலி, ஒரு பெண் புலி இறந்து கிடந்தது தெரியவந்தது.

புலிகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. முக்கிய உடற்பாகங்கள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன் அறிக்கை வந்த பின்னரே புலிகள் இறந்ததற்கான காரணம் தெரியவரும். இறந்து கிடந்த புலிகளுக்கு ஒரு வயது இருக்கும் என்றும், ஒன்றொடொன்று மோதி கொண்டதில் இறந்து இருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் கூட்டமுண்டா பகுதியில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் இருந்தது. அங்கு கூண்டு வைத்து புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், ஒரு புலி இறந்து கிடந்து உள்ளது. வயநாட்டில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 3 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கேரள வனத்துறை மந்திரி ஏ.கே.சசீந்திரன் விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார். அத்துடன், 3 புலிகள் இறந்த சம்பவத்திற்கு பின்னால் ஏதாவது சதித்திட்டம் உள்ளதா? யாராவது இதன் பின்னணியில் இருந்து செயல்பட்டார்களா? என்பது குறித்து விசாரித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு இருக்கிறார்.

இதற்காக வனத்துறை தலைமை அதிகாரி தீபா தலைமையில் 8 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்