கர்நாடகாவில் வீட்டின் மேற்கூரை இடிந்ததில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்
கர்நாடகாவில் பருவமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.;
பெங்களூரு,
கர்நாடகாவில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகின்றது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சவனூர் தாலுகாவில் உள்ள மடபுரா கிராமத்தில் நேற்று கனமழை பெய்தது. இந்த கனமழையால் அந்த கிராமத்தின் ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மடபுரா கிராமத்தில் உள்ள ஒரு குடிசை வீட்டில் முத்தப்பா ஹரகுனி (35), அவரது மனைவி சுனிதா (30), தாய் யல்லம்மா (70), இரட்டை மகள்கள் ஆகியோர் வசித்து வந்தனர். நேற்று அதிகாலை வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் மீது விழுந்தது. 3 பேர் பலியான நிலையில், காயமடைந்த முத்தப்பா, அவரது மனைவி மற்றும் தாயார் ஆகிய 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், ஹாவேரி மக்களவை உறுப்பினரான கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முதல்-மந்திரி நிவாரண நிதியிலிருந்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.